ஆளுநர் - மாநில அரசு மோதல் போக்கால் மக்களுக்கே பாதிப்பு: உச்ச நீதிமன்றம்
ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையேயான மோதல் போக்கால் மக்களுக்கே பாதிப்பு ஏற்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆளுநர் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளது.

ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையேயான மோதல் போக்கால் மக்களுக்கே பாதிப்பு ஏற்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆளுநர் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளது.
ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே பல விவகாரங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்க மறுக்கிறார். இச்சூழலில் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
ஆளுநரின் பரிசீலனைக்காக அனுப்பிய 12 மசோதாக்கள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. மசோதாக்களைப் பரிசீலிக்காமல் புறக்கணிப்பதன் மூலம் ஆளுநர் தனது அரசியல் சாசனக் கடமையைச் செய்ய தவறுகிறார் என தமிழக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரணக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கக் கூடாது என்று கூறியுள்ளது. ஆளுநர் எந்த அடிப்படையில் முடிவுகள் எடுக்கிறார் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் இதற்கு நாளை மறுநாள் பதில் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசு தரபிபல் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், தமிழக ஆளுநர் அமைச்சரை திடீரென டிஸ்மிஸ் செய்வதாக அறிவிக்கிறார், ஊடகங்களுக்கும் அதை செய்தியாகத் தருகிறார்; ஆளுநர் மாநில அரசின் ஆலோசனையைப் பெறாமல் தன்னிச்சையாகச் செயல்படுவதற்கு இதுவே உதாரணம் என்று வாதிட்டார்.
இதனைக் கேட்ட நீதிமன்றம், ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையேயான மோதல் போக்கால் மக்களுக்கே பாதிப்பு ஏற்படுகிறது எனக் கவலை தெரிவித்தது. அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுநர் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுகளை எடுக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளது.