திண்டுக்கல்

குறுகிய கால பயிர்க்கடனை, மத்திய காலக் கடனாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் விவசாய கடன்களை வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “விவசாயத்திற்காக குறுகிய கால பயிர்க்கடன், மத்திய காலக்கடன், பண்ணைகள் தொடர்பான நீண்டகாலக் கடன்கள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பாலும், போதிய மழை பெய்யாததால் நிலவும் கடுமையான வறட்சியாலும் விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்ற கடனை உரிய நேரத்தில் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் குறுகிய கால பயிர்க்கடனை, மத்திய காலக் கடனாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன், விவசாய கடன்களை வசூலிக்க நோட்டீஸ் அனுப்புதல், சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகியவை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

2017–2018–ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.290 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பயிர்க்கடன் வழங்க கூட்டுறவுத் துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.