டாஸ்மாக் கடைகள் மூடல் திசைதிருப்பும் நடவடிக்கை: ஜெயக்குமார் விமர்சனம்!
டாஸ்மாக் கடைகளை மூடுவது திசை திருப்பும் நடவடிக்கை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்
தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் நோக்கத்துடன் 5329 டாஸ்மாக் மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடிட கடந்த ஏப்ரல் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில், அந்த அரசாணையை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளை கண்டறிந்து அவற்றை 22.6.2023 அன்று முதல் மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில், மேற்குறிப்பிட்ட 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் நாளை முதல் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், டாஸ்மாக் கடைகளை மூடுவது திசை திருப்பும் நடவடிக்கை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அமலாக்கத்துறையால் ஏற்பட்ட பாதிப்பை திசைதிருப்பவே 500 டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.
BREAKING: குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.. நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது..!
முன்னதாக, தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி அவருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற அனுமதியையடுத்து, செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் இரண்டு முறை சோதனை நடத்தி அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.