விராலிமலை,
விராலிமலை அருகே கள்ளக்காதலில் பிறந்ததால் குழந்தையை முட்புதரில் வீசினேன் என்று காவலாளர்களிடம் தாய் வாக்குமூலம் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்த கல்குத்தான்பட்டி அருகே இருக்கும் சாலையோர முட்புதரில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி அளவில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் முட்புதரின் அருகே சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு தொப்புள்கொடி கூட அறுக்கப்படாமல் முள்ளில் சிக்கிய நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் விராலிமலை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் காவல் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்–இன்ஸ்பெக்டர் இசைவாணி, குழந்தைகள் நல உறுப்பினர் ராஜேஷ் கண்ணா மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் அந்த குழந்தையை மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவலாளர்கள் அந்த முட்புதர் அருகே நின்று கொண்டிருந்த விராலிமலை கல்குத்தான்பட்டி கிராமத்தை சேர்ந்த மணிமேகலை (35) என்ற பெண் மீது சந்தேகப்பட்டு விசாரணை நடத்தினர்.
இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். பின்னர் அந்த பெண்ணை காவல்துறையினர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த பெண்தான் குழந்தையின் தாய் என்பதை உறுதிப்படுத்தினர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், “எனக்கும், கீரனூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு கேசவன் (10) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக நானும், எனது கணவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம்.
இந்த நிலையில் எனக்கும், உறவினர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த கள்ளத்தனமான பழக்கம் நாளடைவில் உறவாக மாறியது. இதன் விளைவாக நான் கர்ப்பம் ஆனேன். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. எனது உறவினருக்கு தெரிந்தால் அவமானம் ஏற்படும் என்பதால் குழந்தை பிறந்ததை மறைக்க திட்டமிட்டேன். அதன்படி குழந்தையை விராலிமலை அருகே உள்ள சாலையோர முட்புதரில் வீசி விட்டு அதன் அருகே நின்று கொண்டிருந்தேன். அப்போது காவலாளர்கள் என்னை பிடித்து விட்டனர்” என்று மணிமேகலை பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து குழந்தை மற்றும் தாய் மணிமேகலைக்கு விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து விராலிமலை காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.
ஈவு இரக்கமின்றி பிறந்த குழந்தையை முட்புதரில் வீசி சென்ற தாயால் விராலிமலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
முட்புதரில் குழந்தை கிடந்த செய்திக் காட்டு தீப்போல் விராலிமலை பகுதியில் பரவியதால் அரசு மருத்துவமனைக்கு குழந்தை இல்லாத பெற்றோர்கள் சிலர் வந்தனர்.
அவர்கள் குழந்தையை தங்களுக்கு தருமாறும், அதை தத்தெடுக்க விரும்புவதாகவும் கூறினார்கள். உடனே அந்தப் பகுதிக்கு வந்த மாவட்ட குழந்தைகள் நல உறுப்பினர் ராஜேஷ் கண்ணா அவர்களிடம் பேசினார். அப்போது “சட்டபூர்வமாக தத்தெடுக்க விரும்பினால் அதற்குரிய நடைமுறைகளை பின்பற்றி ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும்” என்று ஆலோசனை வழங்கினார்.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
