மாணவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.? எப்போது தொடங்கும்- தமிழக அரசு
அரசு பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் நடைமுறைப்படுத்த உள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ தாஸ்மீனா அறிவித்துள்ளார்
தமிழக அரசு உதவி திட்டம்
தமிழக அரசு சார்பாக பல்வேறு உதவி தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக கல்லூரி படிக்கும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கடந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இந்தநிலையில் இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக தலைமை செயலாளர் முக்கிய அறிவிப்பை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நான் முதல்வன் கல்லூரி கனவு 2024 நிகழ்ச்சியில் பங்கேற்று பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மாணவர்களுக்கும் உதவித்தொகை
தேசிய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும். ப்ளஸ் டூ முடித்து உயர்கல்விக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகளின் எண்ணிக்கை 100 சதவீதத்தை எட்டும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
புதுமைப்பெண் திட்டத்தால் மாணவிகளின் சேர்க்கை விகிதம் கல்லூரிகளில் அதிகரித்துள்ளதாகவும், தமிழக அரசின் முயற்சியால் கடந்த ஆண்டு 30 ஆயிரம் பேர் கூடுதலாக உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர் என கூறினார். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 20 - 25% கல்லூரி பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்தார்.
ஜூலை மாதம் முதல், அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தும் தமிழ் புதல்வன் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளதாக அவர் தெரிவித்தார். இது போன்ற திட்டங்களால் உயர் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
BJP : தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்எல்ஏ காலமானார்.! இரங்கல் தெரிவிக்கும் அரசியல் தலைவர்கள்