வளிமண்டல மேலடுக்கில் நிலவும் காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் மாதம் மழை பெய்து வருகிறது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தென்மாவட்டங்கள் அதிகம் பயன்பெற்றுள்ளது. 

ஆனால் தற்போது வெயில் தமிழகத்தை வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல் மாதமே தொடங்காத நிலையில் மக்கள் வெளியே வர அச்சப்படும் அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிறது. 

சென்னையில் தற்போது 95 முதல் அதிகபட்சம் 99 டிகிரி வரை வெயில் அடிக்கிறது. இதனிடையே குமரி கடல் பகுதிகளில் காற்றின் மேலடுக்கில் சுழற்சி நிலவி வருவதால் சில மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் தென்கேரளா கடற்பகுதியில் இருந்து ஆந்திரா மாநிலம் ராயலசீமா வரை தமிழகம் வழியாக வளிமண்டல மேலடுக்கில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதனால் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சில நேரங்களில் இடியுடன், கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.