மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!
சட்டப்பேரவை தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைப்பதில் திமுக உறுதியாக உள்ளது. இதற்காக திமுக கையில் வைத்துள்ள மிகப்பெரும் ஆயுதம் மகளிர் உரிமைத் தொகை.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" விழாவில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாவது கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். புதிதாக 16,94,339 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் இந்த திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 1,30,69,831 ஆக உயர்ந்துள்ளது.
வரலாற்றை திருத்தி எழுதும் திட்டம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்த முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தின் தொகை உயரும் என்று ஒரு மகிழ்ச்சி செய்தியை கூறியுள்ளார். இது தொடர்பாக விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், ''நம்முடைய இலட்சியப் பயணத்தில் மிகப்பெரிய முன்னெடுப்பாக, வரலாற்றை திருத்தி எழுதும் திட்டமாக அமைந்திருப்பதுதான் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்.
இந்த திட்டத்தின் வெற்றியின் உச்சம் இதுதான்
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த திட்டத்தின் வெற்றியின் உச்சம் என்ன தெரியுமா? அண்டை மாநிலங்கள்கூட இந்தத் திட்டத்தை தங்களுடைய மாநிலங்களில் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள்நலத் திட்டங்களை இலவசங்கள் என்று கொச்சைப்படுத்துகின்றவர்கள் கூட இந்த திட்டத்தை, அவர்கள் மாநிலத்தில் செயல்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
உரிமைத்தொகை உயரும்
மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், சத்திஸ்கர், ஒடிசா, புதுச்சேரி அதுமட்டுமல்ல, தற்போது கர்நாடகா, ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம், மேற்குவங்கம், சிக்கிம் என பத்து மாநிலங்களில் உரிமைத் தொகை மகளிர் மறுமலர்ச்சிக்கான திட்டமாக உயர்ந்து நிற்கிறது. தலைநிமிரும் தமிழ்நாட்டில், பெண்கள் உயர்ந்து நடைபோட, நிச்சயம் உரிமைத்தொகையும் உயரும்! பெண்களின் உரிமையும் உயரும்'' என்று கூறியுள்ளார்.
உரிமைத்தொகை திமுகவின் தேர்தல் ஆயுதம்
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 200க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைக்க திமுக உறுதியாக உள்ளது. இதற்காக திமுக கையில் வைத்துள்ள மிகப்பெரும் ஆயுதம் மகளிர் உரிமைத் தொகை. கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற இந்த வாக்குறுதியும் முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையல்ல.
உரிமைத்தொகை எவ்வளவு உயரும்?
அந்த வகையில் இந்த முறையும் தேர்தலில் மகளிர் உரிமைத் தொகை பெரிதும் கைகொடுக்கும் என திமுக நம்புகிறது. இதனால் பெண்களின் வாக்குகளை மொத்தமாக அள்ள மகளிர் உரிமைத் தொகையை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

