மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ஆம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் புதிதாக 17 லட்சம் பெண்களின் அக்கவுண்ட்டில் ரூ.1,000 செலுத்தப்படும்.

தமிழ்நாடு அரசு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' என்ற பெயரில் ரேஷன் கார்டு வைத்துள்ள மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கி வருகிறது. இந்த 1,000 ரூபாய் தகுதியான பெண்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் மாதம்தோறும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்ட 2ஆம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

17 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்ப்பு

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' நிகழ்ச்சியில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் விரிவாக்கம் செய்துள்ளார். மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் 2ம் கட்டத்தில் புதிதாக 16.94 லட்சம் பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன் பெறும் மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை சுமார் 1.30 கோடியாக உயர்ந்துள்ளது.

நெகிழ்ச்சி அடைந்தேன்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்து விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ''இந்த விழாவில் பெண்கள் பேசியதை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தேன். உள்ளத்தில் இருந்து பேசிய அனைவருக்கும் நன்றி. திராவிட மாடல் அரசின் புதுமைப்பெண் திட்டம், விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டங்களால் பெண்கள் பயனடைகின்றனர்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் மாபெரும் வெற்றி

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வெற்றியின் உச்சம் இதை அண்டை மாநிலங்களில் செயல்படுத்துவது தான். மக்கள் நலத்திட்டங்களை இலவசம் என கொச்சைப்படுத்தியவர்கள் கூட அவர்களின் மாநிலங்களில் இதை செயல்படுத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா, சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், புதுச்சேரி உள்பட 10 மாநிலங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றனர்.

மகளிர் உரிமைத்தொகை உயரும்

வரலாற்றத்தை திருத்தி எழுதக்கூடிய திட்டமாக இது உள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டம் அவர்கள் குழந்தைகளின் கல்வி செலவுக்கு பயன்படுகிறது. தலைநிமிரும் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்ந்து நடைபோட நிச்சயம் மகளிர் உரிமைத்தொகையும் உயரும். பெண்களின் உரிமையும் உயரும்'' என்று தெரிவித்துள்ளார்.