கரூரில் அரசுப் பேருந்து ஓட்டுநருடன் நடு ரோட்டில் ரகளையில் ஈடுபட்டு, அவரைத் தாக்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவிட்டார்.

கரூர் சின்னாண்டி பட்டையைச் சேர்ந்தவர் ராஜூ (52). அரசுப் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றுகிறார். இவர், சனிக்கிழமை இரவு கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து மணப்பாறைக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்திருந்தார்.

ரவுண்டானா பகுதி பேருந்து நிலையத்திலும் பயணிகளை ஏற்றியபோது, அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் தேவாசீர்வாதம் வின்சென்ட், ராஜூவிடம் பேருந்தை உடனே எடு என்று அதட்டினார். பயணிகள் ஏறுகிறார்கள் என்று காட்டமாக சொன்னார் ஓட்டுநர் ராஜூ. இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில், பேருந்து ஓட்டுநர் ராஜூவை தேவாசீர்வாதம் வின்சென்ட் சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதலைத் தொடர்ந்து, நடு ரோட்டில், வாகனத்தை அப்படியே நிறுத்திவிட்டு ஓட்டுநரும், நடத்துநரும் போராட்டத்தில் இறங்கினர். இதனைப் பார்த்த பயணிகள் மற்றும் மக்கள் அந்தப் பகுதியில் திரண்டனர். உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தார்.

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே. ராஜசேகரன், சிறப்பு உதவி ஆய்வாளர் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை எடுத்து அவரை ஆயுதப்படைக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக இடமாற்றம் செய்துள்ளார்.