The bomb exploded hand cut off
புதுச்சேரி அருகே சமூக விரோதிகள் வெடிகுண்டு தயாரிக்கும் போது எதிர்பாராத விதமாக வெடித்ததில் ஒருவரின் கை துண்டானது. இது தொடர்பாக ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம், பொம்மையார்பாளையம் பகுதியில் சுனாமி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புகளில், சிலர் வாடகை எடுத்து தங்கி வருகின்றனர். இங்கு தங்கியிருப்பவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று அதிகாலை சுனாமி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வெடிகுண்டு ஒன்று பயங்கரமான சத்தத்துடன் வெடித்தது. இதில் ஒருவரின் கை துண்டானது.

குண்டு வெடிப்பை அடுத்து, அருகில் இருந்தோர் போலீசாருக்கு தகவல் அனுப்பினர். தகவல் அறிந்து வந்த போலீசார், வெடிகுண்டு வெடித்த இடத்தில் விசாரணை நடத்தினர். சுனாமி குடியிருப்பில் வெடிகுண்டு தயாரித்து வரும் தகவல் போலீசாரை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது. மேலும், வெடிகுண்டு தயாரிப்பின்போது, எதிர்பாராத விதமாக குண்டு வெடித்ததால், ஒருவரின் கை துண்டாகி உள்ளது. இதையடுத்து, படுகாயமடைந்த ரவுடியை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
