மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானத்தால் சென்னை, மன்னார்குடி, திருச்சி மேதரும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த நான்கு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

சென்னை மவுலிவாக்கம் கோவிந்தராஜ நகரில் வசித்து வந்தவர் சீனிவாசன். ஒரு தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த வாரம் திருவள்ளூரில் பைக்கில் செல்லும்போது லாரி மோதி விபத்து ஏற்பட்டதால் தலையில் பலத்த காயமடைந்த அவரை சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்தார்.

இந்நிலையில், மரணமடைந்த அவரின் உடல் உறுப்புகளை தானம் கொடுக்க மனைவி லலிதா, மகள்கள் சாம்பவி, அஷிதா ஆகியோர் முன்வந்தனர். டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை செய்து அவரது உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் கண்களை எடுத்தனர்.

கல்லீரலை மேற்கு வங்கத்தை சேர்ந்த வணிகர் ஒருவருக்கும், ஒரு சிறுநீரகத்தை திருச்சியை சேர்ந்த பொறியாளருக்கும் பொருத்தினர். ஒரு கண் மன்னார்குடியைச் சேர்ந்த விவசாயிக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு கண் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு சிறுநீரகம் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு பொருத்தப்பட்டது. மூளைச்சாவு அடைந்த சீனிவாசனின் உடல் உறுப்புகள் தானத்தால் 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.