ஆன்லைன் விளையாட்டு தடை மசோதாவை இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கடந்த 9ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.  

முந்தைய சட்ட சபை கூட்டத்தொடரில், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை சட்டம் கொண்டுவரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

இதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு கடந்த ஜூலை 27 ஆம் தேதி தனது அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. அதன்பின், ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டது.

மேலும் படிக்க:மதுரை ஆதின நிலங்கள் ஒத்திக்கு விடப்பட்ட வழக்கு! - மதுரை ஹைகோர்ட்டு சரிமாரி கேள்வி!

இதற்கு கடந்த செப்.26-ந் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் இந்த அவசரச் சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கான தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கடந்த 9ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிரந்தரம் சட்டம் இயற்றப்படும் என தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி தமிழக மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இன்றுடன் சட்டப்பேரவை முடிவடைய உள்ள நிலையில், இன்று ஆன்லைன் விளையாட்டு தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க:புதுச்சேரியில் விரைவில் தமிழ் வழியில் மருத்துவ கல்லூரி… தமிழிசை சௌந்தரராஜன் சூப்பர் தகவல்!!