நீட் தேர்வுக்கு எதிராக நடக்கும் போராட்டத்திற்கு தடை விதிக்கவில்லை எனவும், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் உள்ள போராட்டத்திற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் விளக்கம் கொடுத்துள்ளனர். 

நீட் தேர்வுக்கு எதிராகவும் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது.  

அந்த வகையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று திருச்சியிலும் டிடிவி தினகரன் தலைமையில் நாளை சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பும் பொதுக்கூட்டமும் ஆர்பாட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதனிடையே உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இருந்தால் மாநில அரசு அனுமதிக்க கூடாது என கூறி வழக்கை ஒத்திவைத்தது. 

இதைதொடர்ந்து, இன்று நடைபெறவிருந்த திமுக பொதுக்கூட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுப்பு தெரிவித்தது. 
ஆனால் தடையையும் மீறி திருச்சியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீட் எதிர்ப்பு போராட்டங்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு  அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிப்பதாகவும், நீதிமன்ற தீர்ப்பை மதித்து கழகத்தின் சார்பில் நாளை நடைபெற இருந்த நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் டிடிவிதினகரன் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக நடக்கும் போராட்டத்திற்கு தடை விதிக்கவில்லை எனவும், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் உள்ள போராட்டத்திற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் விளக்கம் கொடுத்துள்ளனர். 

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ள போராட்டத்திற்கு மட்டும் நடவடிக்கை எடுக்கலாம் எனவும், நீட் தேர்வுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.