தமிழ் ஊடகமான நியூஸ் ஃபாஸ்ட்  இணையதளத்தை ஏசியாநெட் செய்தி நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஆங்கிலம் மற்றும் தென் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் செய்தி வெளியிடும் நிறுவனமாக ஏசியா நெட் நிறுவனம் உயர்ந்துள்ளது.

ஏசியாநெட் மலையாளத்தில் ஏசியாநெட் நியூஸ் எனவும், கன்னடத்தில் சுவர்ணா நியூஸ் எனவும் இயங்கி வருகிறது. மேலும் கன்னட மொழியில் கன்னட பிரபா என்ற செய்திதாளையும் வெளியிட்டு வருகிறது.
ஏசியாநெட் மலையாளம் மற்றும் கன்னட மொழியில் இனைய தளங்களை இயக்குவதோடு தற்போது தெலுங்கிலும் இணையதளம் ஒன்றினை நிறுவியுள்ளது.

அந்த வகையில் தற்போது மாநில செய்திதாள்கள் மட்டுமில்லாமல் இணையதள ஊடகங்கள் வாயிலாகவும், செய்திகளை விரைந்து அளிப்பதில் பெரும்பங்காற்றி வருகின்றது. 

இவ்வாறு செய்திகளை இணையதளம் மூலம் விரைந்து வழங்குவதில் தமிழ் ஊடகங்களுக்கு சவாலாக விளங்கி வருவது தான் நியூஸ் ஃபாஸ்ட் இணையதளம். 

பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கொண்ட இந்த இணையதளம் செய்திகளை உடனுக்குடன் விரைவாக தருவதோடு மட்டுமல்லாமல் தமிழக அரசியலை மிக சிறப்பாக அலசி வருகிறது என்றே சொல்லலாம். 

இத்தகைய சிறப்பு வாய்ந்த நியூஸ் ஃபாஸ்ட் இணையதளத்தின் மூலம் தமிழ் ஊடகத்தில் கால் பதிக்கிறது ஏசியநெட் நிறுவனம்.

ஏசியாநெட் செய்தி நிறுவனதின் சிஓஓ அனூப் கூறியதாவது:  ஏசியா நெட் செய்தி நிறுவனம் தற்போது டிஜிட்டல் முறையில் செய்திகளை உடனுக்குடன் அளிப்பதுடன் மட்டுமல்லாமல், அந்தந்த மாநில மொழிகளில் செய்திகள் மக்களை சென்றடைய வேண்டும் என்று செயல் பட்டு வருகிறது.  

டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி செய்திகளை மக்களுக்கு அளிக்க முனைப்புடன் செயல்படுகிறது. 

தற்போது தமிழ் வாசகர்கள் செய்திகளை தெரிந்து கொள்ள அதிகமாக இணையதளங்களையே பயன்படுத்துகின்றனர். மூன்றில் ஒருவர், செய்திகளை மொபைல் மூலமே தெரிந்துகொள்கின்றனர்.

இது ஒரு பல் ஊடக சந்தை, இதன் மூலம், தொலைக்காட்சி, செய்திதாள் மற்றும் இணையம் என பல துறைகளில் இயங்குவதன் மூலம் தென்னிந்திய செய்தி ஊடகத்துறையில் ஒரு பெரும் தாக்கத்தை எங்கள் நிறுவனம் ஏற்படுத்தும்.  நிறுவனத்தின் தற்போதைய இலக்கு தமிழ் மொழியில் ஒரு நல்ல செய்தி நிறுவனமாக வளர்வதே.  

நியூஸ்பாஸ்ட் இணையதளத்தின் நிறுவனர் மதிவாணன் கூறியதாவது: ஏசியா நெட்டுடன் இணைந்து நானும் எனது குழுவும் தற்போது மிகப்பெரிய எண்ணிகையிலான வாசகர்களை சென்றடைவோம். இதன் மூலம் எங்களின் வளர்ச்சி பன்மடங்காக பெருகும் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நியூஸ் ஏபுல் ஆலோசகர் லக்ஷ்மி சௌத்ரி கூறியதாவது: ஏசியாநெட் மக்களிடையே நல்ல மதிப்பும் பிரபலமும் கொண்டது. குறிப்பாக தென்னிந்திய மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அதற்கேற்ப வீடியோ மற்றும் செய்திகளை வெளியிட்டு வருகிறது.

தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மற்ற நிறுவனங்கள்  செயல்படுவதை விடவும் மிகவும் சிறப்பாக செயல் பட முடியும் என நிரூபித்து வருகிறது. 

இந்த இணைப்பின் மூலம் தமிழ் இணைய ஊடகத்திற்குள் நுழைந்திருக்கும் ஏசியா நெட் இனி newsable.com என்ற தளத்தின் மூலம் ஆங்கிலத்திலும் செய்திகளை தரும்.