டெல்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்றதால் கைது செய்யப்பட்ட விவசாயிகள் விடுவிக்கப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

அதில், மண் சோறு சாப்பிடுவது, அரை நிர்வானம் என பல்வேறு போராட்டஙகளை 41 நாட்களாக நடத்தி வந்த விவசாயிகள் பிரதமரை நேரில் சந்திக்க வேண்டும் வலியுறுத்தினர். ஆனால், கடைசி வரை அவர்களை சந்திக்க பிரதமர் வாய்ப்பு கொடுக்கவில்லை.

பின்னர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று விரைவில் தீர்வு ஏற்படும் என்று உறுதியளித்ததால் விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

இதைதொடர்ந்து விவசாயிகளின் பிரச்சனையில் தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். இதற்காக கடந்த 14-ந்தேதி காலை திருச்சி ஜங்சனில் இருந்து சுமார் 100 விவசாயிகள் ரயில் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு இன்று காலை சேர்ந்தனர். அவர்கள் பிரதமர் இல்லம் அருகே சாலையில் திடீரென அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் டெல்லி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பிரதமரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி கோ‌ஷமிட்டதால் அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளும் விடுவிக்கப்பட்டனர்.