திருப்பரங்குன்றம் மலை கோயில்-தர்ஹா பிரச்சனையில் அதிமுக அமைதிப் பேச்சுவார்த்தையில் கையெழுத்திட மறுத்ததாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருப்பரங்குன்றம் சர்ச்சை

திருப்பரங்குன்றம் மலை பகுதியில் உள்ள கோயில்- தர்ஹா பிரச்சனை தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் மலையை பாதுகாப்போம் என கோரி பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த போராட்டத்தால் இரு பிரிவினர் இடையே பதற்றமான சூழ்நிலை உருவானது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை பிரச்சனை தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக சமாதானப்பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இதில் கலந்து கொண்ட அதிமுக அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒத்துக்கொள்ளாமல் கையெழுத்திடாமல் சென்று விட்டதாக கூறியிருந்தார்.

ஆட்சியர் மன்னிப்பு கேட்கனும்

இதனால் அதிமுக பாஜகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக விமர்சிக்கப்பட்டது. இதனையடுத்து மதுரை அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், அதிமுக சார்பாக எந்த நிர்வாகியும் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லையெனவும், அப்படி இருக்கையில் எப்படி புறக்கணித்தது என கேள்வி எழுப்பினர். மேலும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறினர். இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அதிமுக சார்பாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுக தொடர்பான தவறான தகவல் வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இல்லையென்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய அதிமுக

இது தொடர்பாக திருப்பரங்குன்றம் எம் எல் ஏ ராஜன் செல்லப்பா கூறுகையில், அந்த அமைதிப் பேச்சு வார்த்தையில் சட்டமன்ற உறுப்பினரான எனக்கு எந்தவித அழைப்பும் இல்லை. எங்களை சார்ந்த நிர்வாகிகளுக்கும் எந்த அழைப்பும் இல்லை. அப்படி அழைப்பில்லாத கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை ஆனால் எங்கள் பிரதிநிதி கலந்து கொண்டு கையெழுத்திட மறுத்ததாக கருத்து சொல்லி இருக்கிறார்.

மாவட்ட ஆட்சியர் தற்போது வரை எந்தவித வருத்தமோ அல்லது மாற்ற செய்தியோ அறிவிக்காததால் எங்கள் வழக்கறிஞர் குழு அவர் மீது வழக்கு தொடுக்க முடிவு எடுத்துள்ளோம். இது தொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கையை மாற்றி அறிவித்து வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.