The 3rd day of Satyagraha struggle to continue to pay equal compensation to the victims
கன்னியாகுமரி
ஓகி புயலில் பாதிக்கப்பட்ட அனைவர்களுக்கும் சம இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கன்னியாகுமரியில் மூன்றாவது நாளாக விவசாய அமைப்புகள் சத்தியாகிரக போராட்டத்தைத் தொடர்ந்தன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வீசிய ஓகி புயலில் ஏராளமான விவசாயிகள், மீனவர்கள் பாதிக்கப்பட்டனர்.
எனவே, "புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சம இழப்பீடு வழங்க வேண்டும்,
விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்,
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்" என்பது உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய அமைப்புகள் கடந்த 2-ஆம் தேதி முதல் கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் தொடர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களின் போராட்டத்திற்கு தி.மு.க. உள்பட பல அரசியல் கட்சியினர் ஆதரவு அளித்துள்ளனர். இந்த போராட்டம் கடந்த இரண்டு நாட்களாக இரவு - பகலாக நடந்து வந்தது. நேற்று மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்ந்தது.
இந்த நிலையில் போராட்ட பந்தலின் அருகே அரசியல் கட்சியினர் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திற்கு மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். விவசாய சங்க நிர்வாகி வின்ஸ் ஆன்றோ முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில், "வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரில் கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தகுந்த நிவாரணம் வழங்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும்.
இல்லையென்றால் மாவட்டம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்துவது" போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் லாரன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயலாளர் முருகேசன், காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர் ஜெகநாதன், ம.தி.மு.க.வை சேர்ந்த சுரேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
