கன்னியாகுமரியில் தொடர்ந்து 11-வது நாளாக போராடும் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சூழ்நிலையிலும் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அரசு மௌனமாக இருக்கிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுப் பெற்ற தொழிலாளர்கள் கடந்த பிப்ரவரி மாதத்திற்கான ஓய்வூதியத்தை வழங்க வலியுறுத்தியும், அவர்களுக்கான பண பலன்களை உடனடியாக வழங்கக் கோரியும் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை கடந்த 16-ஆம் தேதி அன்று தொடங்கினர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலும், கடந்த 16–ந் தேதி அன்று, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நாகர்கோவில் இராணித் தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக மண்டல தலைமை அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.

அரசின் கவனத்தை ஈர்க்க தினமும் நூதன முறையில் வெவ்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஓய்வுப் பெற்ற தொழிலாளர்களின் போராட்டம் நேற்று 11–வது நாளாக தொடர்கிறது. நேற்றையப் போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் தங்களது காதில் பூ வைத்துக் கொண்டு போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஓய்வு பெற்ற தொழிலாளர்களில் ஒருவரான கிள்ளியூர் துவரங்காடு பகுதியைச் சேர்ந்த செல்லன் ஆசாரி (64) என்பவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர் வீட்டுக்குச் சென்றார். அங்கு,ம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போராட்டக்காரர்கள், செல்லன் ஆசாரி மரணத்திற்கு நேற்று நடந்த போராட்டத்தில் மௌன அஞ்சலி செலுத்தினர்.