Asianet News TamilAsianet News Tamil

தங்களை கேட்க யாரும் இல்லை என்ற இறுமாப்பில் இருந்த பாஜக இறங்கி வந்திருக்கே! மறைமுக பதிலடி கொடுத்த தமிழச்சி!

ஒரு தொகுதியும் கிடைக்கவில்லை என்பதை விட 40 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு திமுக கூட்டணி எந்தவித சாதனையையும் செய்ய முடியாது என்று தமிழிசை தெரிவித்திருந்தார்.

thamizhachi thangapandian who gave an indirect response to Tamilisai tvk
Author
First Published Jun 8, 2024, 2:02 PM IST | Last Updated Jun 8, 2024, 2:02 PM IST

40 எம்.பி.க்களால் எந்த சாதனையும் செய்ய முடியாது எனக் கூறிய தமிழிசை சவுந்தரராஜனுக்கு திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை சவுந்தரராஜன்: தமிழ்நாட்டில் பாஜக அதிகமாக வாக்குகள் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இடங்கள் கிடைக்கவில்லை என்பதை எல்லா தொண்டர்களையும் போலவே கவலையாக பார்க்கிறேன். எங்களுக்கு ஒரு தொகுதியும் கிடைக்கவில்லை என்பதை விட 40 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு திமுக கூட்டணி எந்தவித சாதனையையும் செய்ய முடியாது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றதால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தமிழச்சி தங்கபாண்டியன் லிஸ்ட் போட்டு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். 

இதுதொடர்பாக தென் சென்னை தொகுதி திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்... அப்படியில்லை...

* தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த பாஜக இப்பொழுது பிற மாநிலக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய சூழலுக்கு வந்திருக்கிறது.

* இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மோடி தலைக்கு மேல் தூக்கி வணங்கியிருக்கிறார்.

* ஜனநாயகம் என்பது அதிகாரம் செலுத்துவதில்லை- அடங்கி அரவணைத்துச் செல்வது என்பதை பத்தாண்டுகளுக்குப் பிறகு பாஜக உணரத் தொடங்கியிருக்கும்; தாங்கள் எதைச் செய்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற நிலையிலிருந்து இறங்கி வந்திருக்கும்.

* இனி பாஜக அசைக்கவே முடியாத சக்தி என்று ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டு மக்களை நம்ப வைக்க நடந்த முயற்சிகள் உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது. 

* ஜனநாயகத்தில் மக்களே அதிகாரம்மிக்கவர்கள்; தனிமனிதர்களோ அல்லது ஒரு இயக்கமோ மக்களைவிட அதிகாரம் கொண்டது இல்லை என்பதை இந்தத் தலைமுறைக்கு 2024 தேர்தல் உணர்த்தியிருக்கிறது.

ஒருவேளை தமிழ்நாடு வேறு மாதிரி முடிவெடுத்திருந்தால் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கக் கூடும். மேலே சொன்னது எதுவுமே நடக்காமல் போயிருக்கலாம்...

தமிழ்நாடு ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது; மக்களே முக்கியம் என்பதைக் காட்டியிருக்கிறது... அதனால்தான் இதன் பெயர் ‘நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது’ என்று தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios