Thadi Balaji Joins Latchiya Jananayaga Katchi: நடிகர் தாடி பாலாஜி தவெகவில் இருந்து விலகி லாட்டரி அதிபர் மார்டின் மகன் ஜோஸ் சார்லஸின் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்துள்ளார்.
நடிகரும், விஜய்யின் தீவிர விசுவாசியுமான தாடி பாலாஜி தவெகவில் இருந்து விலகி லாட்டரி அதிபர் மார்டின் மகன் ஜோஸ் சார்லஸின் லட்சிய ஜனநாயக கட்சியில் இன்று இணைந்துள்ளார். ஜோஸ் சார்லஸ் புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சியை புதிதாக தொடங்கியுள்ளார். அந்த கட்சியில் தான் தாடி பாலாஜி தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்த தாடி பாலாஜி
லட்சிய ஜனநாயக கட்சி அலுவலகத்துக்கு வந்த தாடி பாலாஜியை அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் வரவேற்று கட்சி துண்டை அணிவித்தார். தவெகவில் இருந்து புதிய கட்சியில் இணைந்தது குறித்து பேசிய தாடி பாலாஜி, ''விஜய் கட்சி தொடங்கியபோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அவர் கூப்பிடாமலேயே கட்சிக்காக வேலை பார்த்தேன். பெயரை பச்சை குத்தினேன். விஜய்க்கு அணில் மாதிரி உதவி செய்ய முடியும் என்று நினைத்தேன். ஆனால் விஜய்யை சுற்றியுளவர்கள் விடவில்லை.
ஜோஸ் சார்லஸ் கட்சியில் இணைந்தது ஏன்?
விஜய்யை சுற்றியுள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் சரியில்லை. விஜய்யை சந்திக்க 10 நிமிடம் வாய்ப்பு கிடைத்தால் கூட தவெகவில் உள்ள பிரச்சனைகளை சொல்லியிருப்பேன். ஜோஸ் சார்லஸ் சார் முதல் சந்திப்பிலேயே வாங்க சேர்ந்து செயல்படுவோம் என்று சொன்னார். அவர் வரவேற்ற விதம் பிடித்து இருந்ததால் சேர்ந்து விட்டேன்'' என்றார்.
புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மீது குற்றச்சாட்டு
விஜய் மீது அளவு கடந்த அன்பு கொண்ட தாடி பாலாஜி, தவெகவின் 2ம் கட்ட தலைவர்கள் சரியில்லை என்று தொடர்ந்து கூறி வந்தார். குறிப்பாக தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். மேலும் 'விஜய்யை நேரில் சந்தித்தால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொல்வேன்' என்றும் தெரிவித்து வந்தார். ஆனால் தவெக இரண்டாம் கட்ட தலைவர் தாடி பாலாஜியை பக்கத்தில் சேர்க்காத நிலையில், இப்போது அவர் ஜோஸ் சார்லஸின் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


