tenth elephant camp inaugurated by tn ministers in mettupalayam
தமிழகத்திலுள்ள கோவில் யானைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த உளைச்சலைப் போக்கி, அவை ஓய்வெடுக்கவும் தெம்பு பெறவும் மருத்துவ கவனம் பெறவும் வருடந்தோறும் புத்துணர்வு முகாம்களை நடத்துகிறது தமிழக அரசு.
இதன்படி, இன்று தமிழக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 10 வது யானைகள் நல்வாழ்வு புத்துணர்வு முகாம் தொடங்கியது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில், இந்த ஆண்டிற்கான புத்துணர்வு முகாம் தொடங்கியது. இதில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோயில் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த 33 யானைகள் பங்கேற்கின்றன.
இந்த முகாமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இன்று தொடங்கும் இந்தப் புத்துணர்வு முகாம், வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை 48 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இதற்காக முகாம் நடக்கும் பகுதியில் அடர்ந்து வளர்ந்த செடி கொடிகளை அகற்றும் பணியும் ஜேசிபி இயந்திரம் மூலம் முட்புதர்களை அகற்றும் பணியும் நடைபெற்று வந்தது.
நெல்லிமலை பகுதியிலிருந்து காட்டு யானைகள் முகாம் நடக்கும் பகுதிக்கு வராமல் இருக்க முகாமைச் சுற்றி உள்ள பகுதிகளில் சோலார் மின் வேலி, தொங்கும் மின் வேலி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
யானைகள் நலவாழ்வு புத்துணர்வு முகாமிற்கான இடம், பாகன்கள் தங்கும் ஓய்வறை, சமையல் கூடங்கள், மருத்துவ முகாமிற்கான இடங்களை சீரமைக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று இடம் தயாரானது. இதனிடையே, இன்று முதலில் வந்த யானைக்கு வனபத்திரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இன்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது முகாம்.
