Asianet News TamilAsianet News Tamil

தென்காசி தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

தென்காசி தொகுதியில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி நிறுத்தப்பட்டுள்ளது

Tenkasi assembly constituency recount of postal vote stopped
Author
First Published Jul 13, 2023, 12:28 PM IST

நீதிமன்ற உத்தரவுப்படி தென்காசி தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துவங்கிய தபால் வாக்குகள் மீண்டும் எண்ணும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்காசி தொகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 18 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் அதிகமாக பெற்று காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றார். 

இதையடுத்து, வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடிகள் நடந்ததாக அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கும் தொடர்ந்தார். உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், மொத்தம் உள்ள 2,769 தபால் வாக்குகளின் எண்ணிக்கையின்போது குளறுபடிகள் நடந்ததாகவும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தபால் வாக்குகளை மட்டும் மீண்டும் எண்ண உத்தரவிட்டது. இதையடுத்து, தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று மறு வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்ட கோட்டாட்சியர் லாவண்யா அறிவித்தார். வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர் அல்லது அவரது பிரதிநிதி ஒருவர் மட்டும் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் கட்டணம்..! தட்டிகேட்டவரை தாக்கிய எஸ்.ஐக்கு அதிரடியாக தண்டனை கொடுத்த எஸ்.பி

அதன்படி, தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில், கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகளின் மறு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சுமார் 20 நிமிடங்கள் தாமதமாகவே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தென்காசி தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துவங்கிய தபால் வாக்குகள் மீண்டும் எண்ணும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. தபால் வாக்குகளில் பதிவு செய்யப்பட்ட 13 சி விண்ணப்பத்தை சரிபார்க்க அதிகாரிகள் தரப்பு மறுப்பு தெரிவித்ததாகவும், வாக்கு சீட்டை மட்டுமே காட்டுவதாக அதிமுக வேட்பாளர் தரப்பில் எதிர்ப்பு வந்ததையடுத்தும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று மதியம் 12.30 மணியளவில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியான நிலையில், தபால் வாக்குகள் மீதான மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios