Ten people were injured when government buses face collision

காஞ்சிபுரம்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காஞ்சிபுரத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் பத்து பேர் பலத்த காயம் அடைந்தனர். விபத்து குறித்து காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கிழக்கு கடற்கரைச் சாலையில் மாமல்லபுரம் வழியாக அரசு விரைவு பேருந்து ஒன்று நேற்று சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது புதுச்சேரியில் இருந்து அரசு விரைவு பேருந்து ஒன்று சென்னையை நோக்கி வேகமாக வந்தது. பூஞ்சேரி என்ற இடத்தில் இரண்டு பேருந்துகளும் வந்தபோது கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.

இதில் நாகப்பட்டினத்துக்கு சென்ற பேருந்து பள்ளத்தில் இறங்கி ஒரு குடிசை மீது மோதி நின்றது. அதேபோல் சென்னை சென்ற புதுச்சேரி பேருந்து இடது பக்கத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் இரண்டு பேருந்துகளில் பயணம் செய்த பத்து பயணிகள் படுகாயம் அடைந்தனர். இவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்தில் நல்ல வேளையாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இந்த விபத்து காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.