காவிரி ஆற்றில் கலக்கும் கழிவு நீர் குறித்து ஆய்வு செய்ய தமிழகம் - கர்நாடகம் - மத்திய அரசு இணைந்து கூட்டுக்குழு அமைத்துள்ளது.

கர்நாடகாவின் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு பல கிலோ மீட்டர் தூரம் தாண்டி தமிழகம் வந்தடைகின்றது. இந்த ஆற்றில், பல்வேறு வகையான கழிவுப் பொருட்கள் கலக்கப்படுவதாகவும், அதுபற்றி கர்நாடக அரசு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், காவிரி ஆறில் கலந்து வரும் மொத்த கழிவுகளில் சுமார் 15 முதல் 20 சதவீதம் மட்டுமே கர்நாடக அரசால் 

சுத்திகரிக்கப்படுகிறது. இதன் காரணமாக அபாயகரமான கழிவுகளோடுதான் காவிரி நீர் தமிழகத்தை வந்தடைகிறது.

அபாயகரமான கழிவுகளோடு வரும் காவிரி தண்ணீரில் விளையும் பயிர்களில் வேதிப்பொருட்கள் அதிகம் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது, ஆற்றில் வளரும் மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், தமிழக விவசாயிகளுக்கு கர்நாடக அரசு ரூ.2 ஆயிரத்து 400 கோடி இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தொடர் விசாரணையில் இருந்து வருகிறது. 

இந்த நிலையில் காவிரி நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தமிழகம் - கர்நாடகம் - மத்திய அரசு இணைந்து கூட்டுக்குழு அமைத்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூட்டுக்குழுவை அமைத்தது. 

இந்த கூட்டுக்குழு வரும் 15 ஆம் தேதி முதல் தனது ஆய்வை தொடங்க உள்ளது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பரத்வாஜ் தலைமையில் இந்த கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், தமிழக மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இடம் பெறுகின்றனர்.