TET Exam : ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TNTET- டெட்) இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 13 என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு :
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க எவ்வித வயது வரம்பு கட்டுப்பாடும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 7 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற ‘டெட்’ தேர்வு எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும்.
தமிழகத்தில் 2012 முதல் 2019 வரை 5 முறை ‘டெட்’ தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் 95 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 25 ஆயிரம் பேர் அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர். எஞ்சியவர்கள் அரசுப் பணி வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.
இன்று முதல் விண்ணப்பிக்கலாம் :
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று (14-03-2022) முதல் அடுத்த மாதம் (13-04-2022) வரை, http://www.trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஆனால்,தாழ்த்தப்பட்டோர்,மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினருக்கு தேர்வு கட்டணம் ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் விவரங்களுக்கு TRB யின் http://www.trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை பார்வையிடவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
