இந்த வருடம் சுய உதவிக் குழுவினருக்கு வங்கிக் கடன் வழங்க ரூ. 36 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் கு.செல்வராசு தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மாவட்டத்தில் உள்ள வங்கி மேலாளர்கள், கூட்டுறவு வங்கி செயலர்களுக்கான நிதி உள்ளீடு, நிதிசார் கல்வி மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கிக் கடன் இணைப்பு தொடர்பான இரண்டு நாள் பயிலரங்கம் நேற்றுத் தொடங்கியது.

இந்த பயிலரங்கத்திற்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் கு. செல்வராசு தலைமை வகித்தார்.

அப்போது, அவர் பேசியது:

“நடப்பு நிதியாண்டில் நிதி உள்ளாக்கம், நிதிசார் கல்வி மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்க மாவட்ட அளவில் ரூ. 36 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

வங்கி மேலாளர்கள் மற்றும் கூட்டுறவு வங்கி செயலர்கள் கடன் உதவிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதன் மூலமாக, கிராம மக்களின் பொருளாதாரம் முன்னேற்றமடைந்து, அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.

எனவே, வங்கி மேலாளர்கள் கூட்டுறவு வங்கி செயலர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு பெருங்கடன் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பி.அருள்தாசன், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் நவீன்குமார், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் உதவித் திட்ட அலுவலர் பெ. வெங்கடேசன், புதுவாழ்வுத் திட்ட உதவித் திட்ட மேலாளர் முத்துவேல் ஆகியோர் வங்கி மேலாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

இதில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் உதவித் திட்ட அலுவலர்கள் ச.துர்காதேவி, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் இரா.சங்கர், பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை ஒன்றிய பகுதிகளை சேர்ந்த வங்கி மேலாளர்கள் மற்றும் கூட்டுறவு வங்கி செயலர்கள் கலந்து கொண்டனர்.