INTJ : இந்திய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் காலமானார்.! யார் இந்த எஸ்.எம்.பாக்கர் தெரியுமா.?
இஸ்லாமியர்கள் மட்டுமில்லாமல் பாதிக்கப்படக்கூடிய தமிழக மக்களுக்காக தொடர்ந்து போராடி வந்த இந்திய தவ்ஹித் ஜமாத் மாநில தலைவர் எஸ்.எம்.பாக்கர் உடல் நிலை பாதிப்பால் காலமானார். அவரது மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமுமுக நிறுவனர்- எஸ்.எம்.பாக்கர்
இஸ்லாமியர்களின் உரிமைகளை மீட்பதற்க்காகவும் தொடங்கப்பட்ட இயக்கம் தமுமுக, இந்த அமைப்பை நிறுவியர்களில் எஸ்.எம்.பாக்கரும் ஒருவர், சிறிது காலத்தில் தமுமுக நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அங்கிருந்து பிரிந்து பி. ஜெய்னுல் ஆபிதீன், எஸ்.எம். பாக்கர் உள்ளிட்டவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்கிற பெயரில் ஓர் அமைப்பைத் 2004ஆம் ஆண்டு தொடங்கினர். இந்த அமைப்பு தமிழகம் முழுவதும் வேகமாக வளர்ந்தது. இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுதலை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடியது. இதில் எஸ்.எம். பாக்கர் முக்கிய பங்காற்றியுள்ளார்.
அவரது ஆவேசமாக பேசக்கூடிய பேச்சு இஸ்லாமியர்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்தது. சிறிது காலத்தில் பி. ஜெய்னுல் ஆபிதீன் உடன் ஏற்பட்ட மோதலால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பில் இருந்து விலகிய எஸ்.எம்.பாக்கர் இந்திய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பை தொடங்கினார்.
எஸ்.எம்.பாக்கர் காலமானார்
எஸ் எம் பாக்கர் அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இருதய நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து சிறிது மீண்டு மருத்துவம் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளில் முனைப்பாக ஈடுபட்டு வந்தார்கள். சிறிது நாட்களுக்கு முன்னால் சென்னை வெள்ளத்தில் நிவாரண பணியில் ஈடுபட்டபோது காலில் காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு இருக்கக்கூடிய உடல் நிலையின் காரணத்தால் அந்த காயம் எளிதாக குணமடையவில்லை. அதற்கு கடந்த ஒரு சில மாதங்களாக மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே,
நுரையீரலில் மீண்டும் நிமோனியா தொற்று ஏற்பட்டது. உடலை வருத்திக்கொண்டு சமுதாயப் பணிகளில் ஈடுபட்டதால், மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் நேற்று இரவு காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். எஸ்.எம்.பாக்கர் உடல் இன்று மாலை ராயப்பேட்டையில் அடக்கம் செய்யப்படவுள்ளது.