Tasmac workers strike tomorrow shops will be closed
நாமக்கல்
டாஸ்மாக் பணியாளர்கள், 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. இதற்கு மாவட்டச் செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார்.
தலைவர் இளஞ்செழியன் முன்னிலை வகித்தார். மாநில சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன், மாநிலச் செயலர் முத்துக்குமார் பேசினர்.
இந்தக் கூட்டத்தில், "பணி நிரந்தரம், கால முறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
ஓய்வுபெறும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிக்கொடை குறைந்தபட்சம் ரூ.5 இலட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியம் குறைந்த பட்சமாக ரூ. 5000 வழங்க வேண்டும்.
பணியாளர்களுக்கு பணிப் பதிவேடு மற்றும் பணிவிதிகள் ஏற்படுத்த வேண்டும். மாதாந்திரப் போக்குவரத்துப் பயணப் படியை அனைத்து மேற்பார்வையாளர்களுக்கும் ரூ. 1,000 உயர்த்தி வழங்க வேண்டும்.
கடைகள் மூடப்பட்டதால் பணியிழந்து மன உளைச்சல் மற்றும் எதிர்கால வாழ்க்கை குறித்த காரணங்களால் தற்கொலை செய்து கொண்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்துக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணியும், இழப்பீடு தொகையும் வழங்க வேண்டும்" உள்ளிட்ட 30 அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29-ஆம் தேதி (அதாவது நாளை) டாஸ்மாக் கடையடைப்பு மற்றும் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மாவட்டப் பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பிரசார செயலர் மதன் நன்றித் தெரிவித்தார்.
