தமிழகத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு 5 கி.மீ சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு 5 கி.மீ சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் நிறைய கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஓட்டுப்பதிவின்போது, அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியிருந்தது. அதேபோல டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பிப்ரவரி 17 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிப்ரவரி 19 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான நாளையும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், மேற்படி பகுதிகளுக்கு அருகில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் மதுக்கூடம் மற்றும் மதுபானக்கடைகள் மூடியிருக்க உரிய ஆணைகள் வெளியிட வேண்டும் என்று அரசை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது. அதன்படி, கடந்த 17 ஆம் தேதி முதல் ஓட்டுப்பதிவு நடைபெற்ற 19 ஆம் தேதி வரை 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டன.

தேர்தல் நடைபெற்ற பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் கடந்த 16 ஆம் தேதி இரவு 10 மணியுடன் மூடப்பட்டது. 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு டாஸ்மாக் திறக்கப்பட்டதால், குடிமகன்கள் டாஸ்மாக்குகளில் அலைமோதினர். ஒன்றுக்கும் மேற்பட்ட மது பாட்டில்களையும், சிலர் பெட்டி, பெட்டியாகவும் மதுவை வாங்கி சென்றனர். இதனால் சில கடைகளில் நீண்ட வரிசையில் மது பிரியர்கள் காத்திருந்ததை காண முடிந்தது. இந்நிலையில், நாளைய தினம், ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. எனவே, ஓட்டு எண்ணக்கூடிய மையங்களுக்கு 5 கி.மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகள், பார்களை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதையொட்டி, நாளைய தினம் மதுக்கடைகள் மீண்டும் மூடப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 268 மையங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 15 இடங்களில் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.