Taralanna bribe to throw in the false case put veccutuven threatened Inspector involved in the disposal

மதுரை

ரூ.2 இலட்சம் லஞ்சம் கேட்டு, தர மறுத்தால் பொய் வழக்குப் போட்டு உள்ளே தூக்கி வெச்சுடுவேன் என்று மிரட்டிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து மாட்டிக் கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆலத்தூரான்பட்டியைச் சேர்ந்தவர் அன்புச் செல்வன். இவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “நான் ஹாலோ பிளாக் செங்கல் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறேன். இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர் வேலை பார்க்கின்றனர்.

கடந்த 2014–ல் ஒரு பெண் காணாமல் போனது தொடர்பாக கன்னிவாடி காவலாளர்கள் என்னிடம் விசாரணை நடத்தினர். மேலும், விசாரணைக்காக உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறி என்னிடம் ரூ.2 இலட்சம் தருமாறு கேட்டனர். நான் மறுத்து விட்டேன்.

இதனைத் தொடர்ந்து பொய் வழக்கில் என்னை கைது செய்வதாக காவலாளர்கள் மிரட்டினர். மேலும், எனக்கும், என் குடும்பத்தினருக்கும் அடிக்கடி தொந்தரவு கொடுத்தனர்.

இதனிடையே காணாமல் போன அந்த பெண்ணின் தந்தை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அப்போது அந்த பெண்ணை மீட்டு காவலாளர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். படிப்பில் விருப்பம் இல்லாததால், தான் விரும்பியே வீட்டை விட்டு சென்றதாகவும், தன்னை யாரும் கடத்தவில்லை எனவும் அந்த பெண் நீதிமன்றத்தில் கூறினார்.

நான் எந்த தவறும் செய்யாத நிலையில், இலஞ்சம் தர மறுத்ததால் கைது செய்வதாக மிரட்டிய கன்னிவாடி ஆய்வாளர் திருவானந்தம் மற்றும் காவலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் மாவட்ட இலஞ்ச ஒழிப்பு காவலாளர்களுக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.கோகுல் தாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சம்பந்தபட்டவர்கள் மீது துறை ரீதியான விசாரணை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

“காணாமல் போனதாக கூறப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பார்க்கும் போது மனுதாரர், அவரது குடும்பத்தினருக்கு இந்த சம்பவத்தில் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெரிகிறது.

இந்த வழக்கை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட காவலாளர்கள் மீது வழக்கு பதியாமல் முடிப்பது நல்லதல்ல. ஒழுங்கு நடவடிக்கை என்பது மட்டும் போதுமானதல்ல. மனுதாரர் புகாரின் மீது திண்டுக்கல் இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்து விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.