Tanker lorry met accident Petrol and diesel run on the road total of 12 thousand liters ...

மதுரை 

மதுரையில் அரசு பேருந்து மீது டேங்கர் லாரி வேகமாக மோதியதில் நடுரோட்டில் கவிழ்ந்தது. லாரியில் இருந்த 4000 லிட்டர் பெட்ரோல் மற்றும் 8000 லிட்டர் டீசல் சாலையில் ஆறுபோல ஓடியது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை அடுத்த கப்பலூர் சிட்கோ பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷனில் இருந்து 4000 லிட்டர் பெட்ரோலும், 8000 லிட்டர் டீசலும் நிரப்பிக் கொண்டு ஒரு டேங்கர் லாரி மதுரைக்கு புறப்பட்டு வந்தது. இந்த லாரியை சோழவந்தானை சேர்ந்த பாலமுருகன் (43) என்பவர் ஒட்டி வந்தார்.

இந்த நிலையில் மதுரையில் இருந்து திருமங்கலத்துக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று சென்றது. 

திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் நேதாஜிநகர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது நிலைதடுமாறிய டேங்கர் லாரி அரசு பேருந்து மீது வேகமாக மோதியது. அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் அலறினர்.

பேருந்தின் முன்பக்க கண்ணாடிகள் சுக்கு நூறாக நொறுங்கி சிதறியது. மோதிய வேகத்தில் டேங்கர் லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. அதில் டீசல் மற்றும் பெட்ரோல் கசிந்து சாலையில் ஆறுபோல பெருக்கெடுத்து ஒடியது. 

அதனைத் தொடர்ந்து மதுரை – திருமங்கலம் பிரதான சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த ஆஸ்டின்பட்டி காவலாளர்கள் விரைந்து வந்து தென்பழஞ்சி சாலையில் தனக்கன்குளம் வெங்கலமூர்த்தி ஐயனார் கோவில் பிரிவு வழியாக வாகனங்களை திருப்பி அனுப்பி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். 

மேலும், டேங்கர் லாரி கவிழ்ந்த பகுதியின் அருகே பெட்ரோல் பங்க் மற்றும் ஐ.டி.ஐ., கார் கம்பெனிகள் மற்றும் குடியிருப்புகள் இருந்ததால் திடீரென்று டேங்க் லாரி தீப்பிடித்து பரவி விடுமோ? என்ற பயமும், பதட்டமும் நிலவியது. இதனால் அந்த பகுதியில் யாரையும் நெருங்கவிடாமல் காவலாளர்கள் தடுத்தனர். 

மேலும் மதுரை, திருமங்கலத்தில் இருந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ரசாயன கலவை மற்றும் சோப்பு நுரைகளை டேங்கர் லாரி மற்றும் சாலையில் பீய்ச்சி அடித்து தீ பிடிப்பதை தவிர்த்து குளிர்ச்சியை ஏற்படுத்தினர். 

அதன்பின்பு டேங்கர் லாரி அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.