Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாடு vs தமிழகம்: நடிகர் விஜய் அரசியல் கட்சி பெயரில் சர்ச்சை!

நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியின் பெயர் தமிழகம் என்று இருப்பது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது

Tamilnadu tamilagam actor vijay tamilaga vetri kazaham name controversy smp
Author
First Published Feb 2, 2024, 6:38 PM IST | Last Updated Feb 2, 2024, 6:38 PM IST

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய அரசியல் கட்சியை அவர் தொடங்கியுள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் முழுமையாக உதவ வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள நடிகர் விஜய், தனது அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயரிட்டுள்ளார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளதற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, அவரது அரசியல் கட்சியின் பெயர் தமிழகம் என்று இருப்பது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ்நாட்டு அரசியல் சூழலுடன் தவிர்க்க முடியாத கழகம் என்ற பெயரை அவர் தனது கட்சியின் பெயரில் இடம்பெறுமாறு செய்துள்ளார்.

‘கழகங்கள் இல்லா தமிழகம்’ என பாஜக தொடர்ந்து சூளுரைத்து வரும் நிலையில், தனது கட்சியில் கழகம் என்ற பெயரை சேர்த்துள்ளார் விஜய். இது பாஜக தரப்பினரை கொதிப்படைய வைத்துள்ளது. அதேசமயம், தமிழ்நாடு என்று இல்லாமல் தமிழகம் என்ற பெயரை கட்சியில் வைத்துள்ளதும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திமுகவினரை.

ஏனெனில் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது எளிதாக நடந்த ஒரு நிகழ்வு இல்லை. ஒரு பெரும் போராட்டத்துக்கு பிறகே அந்த பெயர் கிட்டியது. ஆனால், தமிழ்நாடு என்ற பெயரை மழுங்கடிக்க செய்யும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

 

 

இதுகுறித்து ஊடகவியலாளர் நெல்சன் சேவியர் தனது எக்ஸ் பக்கத்தில், “சங்க இலக்கியங்களிலிருந்து ஆதாரம் எடுத்து இந்த மண்ணிற்கு தமிழ்நாடு என்பதே பெயர் என்று திரும்ப திரும்ப பேசிக்கொண்டிருக்கிறோம். தமிழ்‘நாடு’ என்ற சொல் வரலாற்றில் பதிந்துவிடக் கூடாது என்பதற்காகவே ராஜாஜி மற்றும் அவரது அரசியல் வாரிசுகள் பயன்படுத்தத் தொடங்கிய தமிழகம்' என்னும் வார்த்தையை தமிழ்நாடு ஆளுநர் RN ரவிக்கு அடுத்து அதிகாரபூர்வமாக பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார் நடிகர் விஜய்.” என பதிவிட்டுள்ளார்.

 

 

முன்னதாக, “தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விடத் தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்” என விழா ஒன்றில் ஆளுநர் ரவி பேசியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது, திராவிட மாடல்’  என்ற வார்த்தையையும், 'அமைதி பூங்கா தமிழ்நாடு' என்ற வாக்கியத்தையும் குறிப்பிடாமல் ஆளுநர் ரவி தவிர்த்தார். குறிப்பாக, தமிழ்நாடு  என்ற வார்த்தயை உபயோகிக்காமல் ஆளுநர் ரவி தவிர்த்தார். கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது, தமிழ்நாடு ஆளுநர்’ என்பதை ‘தமிழக ஆளுநர்’ என அவர் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த பின்னணியில், தமிழ்நாடு என்றில்லாமல் தமிழகம் என தனது கட்சிக்கு விஜய் பெயரிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு, திராவிடம் என்பது ஆரிய அரசியலுக்கு எதிரானது என்பதால், தமிழ்நாடு, திராவிடம் ஆகிய சொல்லாடலை பலரும் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்தியா என்ற நாட்டுக்குள் தமிழ்நாடு எனும் நம்முடைய மாநிலத்துக்கு மட்டும்தான் தமிழ்‘நாடு’ என்ற பெயருள்ளது. அதாவது, நாட்டுக்குள்ளேயே ஒரு நாடு. இது தனியாக ஒரு இனக்குழுவை குறிக்கும் சொல் என்பதால், எதிர்ப்புகள் கிளம்புவதாக கூறுகிறார்கள்.

தமிழக வெற்றி கழகம்: அறிக்கை மூலம் விஜய் என்ன சொல்கிறார்?

முதலில் திராவிட நாடு கோரி அந்த நிலைமை மாறி, தமிழ்நாடு என்ற பெயர்தான் சரி என்ற கருத்து எழுந்தது. பின்னர், பலகட்ட அரசியல் போராட்டங்களுக்குப் பிறகு தமிழ்நாடு என்ற பெயர் நமது மாநிலத்துக்கு கிடைத்ததாக சுட்டிக்காட்டுகிறார்கள்.

மொழிவாரி மாநிலங்கள் அடிப்படையில், மெட்ராஸ் மாகாணத்திலிருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பிரிந்து சென்றுவிட்டதில் இருந்தே மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை தீவிரமாக எழுந்தது. பெரியார், சங்கரலிங்கனார், ம.பொ.சி, பேரறிஞர் அண்ணா போன்றோர் இந்த கோரிக்கையை மிகத்தீவிரமாக எழுப்பினர்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய பேரறிஞர் அண்ணா, “பரிபாடல் என்ற நூலில் தண்டமிழ் வேலி தமிழ்நாட்டு அகமெல்லாம் என்ற வரி இடம் பெற்றுள்ளது. இதற்குப் பொருள், மூன்று பக்கங்களும் கடல் சூழ்ந்த இனிய தமிழ்நாடு!” என்று குறிப்பிட்டார். ஒருகட்டத்தில் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் மட்டும் தமிழ்நாடு என்று அழைக்க அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு ஒப்புக் கொண்டது.

காங்கிரஸ் காலத்தை விட பாஜக ஆட்சியில் மீனவர்கள் கைது அதிகம்: சு.வெங்கடேசன் எம்.பி வருத்தம்!

அதன்பிறகு, 1967ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை ஆங்கிலத்திலும் பயன்படுத்துவதை நிறுத்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் தமிழ்நாடு என்றே மாநிலத்தின் பெயரைக் குறிப்பிடுவதற்கான தீர்மானம் 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதியன்று கொண்டு வரப்பட்டு நிறைவேறியது. இந்த தீர்மானத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகு தமிழ்நாடு என்ற பெயரிலேயே அதிகாரப்பூர்வமாக நமது மாநிலம் அழைக்கப்பட்டு வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios