திருநெல்வேலி

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையை கண்காணிக்க தமிழகத்திற்கு நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று வைகோ தடலாடியாக தெரிவித்தார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருநெல்வேலியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், “ம.தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடத்தப்படும். அதுபோல் இந்தாண்டு அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் செப்டம்பர் மாதம் 15–ஆம் தேதி தஞ்சாவூரில் நடக்கிறது.

இந்தக் கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்வீரர் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மதிமுக-வுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.

நீட் தேர்வை பொறுத்தவரை தமிழக அரசுக்கு மத்திய அரசு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு தகர்ந்து விட்டது.

நீட் தேர்வை போல் பொறியியல் படிப்புக்கும் நுழைவு தேர்வு கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.

தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் நிலை கேலிக் கூத்தாகிவுள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையை கண்காணிக்க தமிழகத்திற்கு நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.