'குற்ற உணர்ச்சியே இல்லையா அண்ணாமலை?'; அமைச்சர் கீதா ஜீவன் பரபரப்பு அறிக்கை; என்ன காரணம்?

பள்ளிக் குழந்தைகளுக்கு அழுகிய முட்டை வழங்கப்படுவதாக கூறிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டை அமைச்சர் கீதாஜீவன் மறுத்துள்ளார்.

Tamilnadu Minister Geetha Jeevan denied Annamalai's accusation that rotten eggs served to school children ray

தமிழ்நாட்டில் மதிய உணவில் பள்ளிக் குழந்தைகளுக்கு அழுகிய முட்டை வழங்கப்படுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பகீர் குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் பகுதி பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. குறைந்தபட்சம் மாதம் ஒருமுறையாவது, தமிழகப் பள்ளிகளில் இது நிகழ்கிறது.

பள்ளிகளில் வழங்கப்பட வேண்டிய முட்டைகள், அரசு முத்திரையோடு கடைகளில் விற்கப்படுவதாகச் செய்திகளைப் பலமுறை பார்த்திருக்கிறோம். ஆனால், குழந்தைகளுக்கு தரமற்ற முட்டைகள் கொடுக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் பொறுப்பான அழுகிய முட்டை அமைச்சர், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

உணவில் தரமற்ற முட்டைகளை வழங்கி, குழந்தைகள் உயிருடன் விளையாடிக் கொண்டிருப்பதை, அழுகிய முட்டை அமைச்சர் கீதா ஜீவன் உணர வேண்டும்'' என்று கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இந்நிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கு தரமான முட்டை வழங்கப்படுகிறது என்று கூறி அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளை அமைச்சர் கீதா ஜீவன் மறுத்துள்ளார்.

Tamilnadu Minister Geetha Jeevan denied Annamalai's accusation that rotten eggs served to school children ray

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அரசு கிராம தொடக்கப்பள்ளி, குழித்துறையில் உள்ள மையத்திற்கு வாரத்திற்கு தேவையான 197 முட்டைகள் பெறப்பட்டதில், 192 முட்டைகள் நல்ல நிலையிலும், 5 முட்டைகள் அழுகிய நிலையிலும் இருந்ததை சத்துணவு அமைப்பாளர்கள் கண்டறிந்தனர். அதை பயன்படுத்தாமல் தனியாக எடுத்து வைத்துள்ளனர்.

அதேபோல், குழித்துறை அரசு கிராம தொடக்கப்பள்ளி மையத்திலும், 96 முட்டைகள் பெறப்பட்டதில், ஒரு முட்டை மட்டும் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இந்த முட்டையும் தனியாக எடுத்து வைக்கப்பட்டுள்ளது. சமையலுக்கு முன்பு அனைத்து முட்டைகளும் நல்ல நிலையில் உள்ளதா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, மாணவர்களுக்கு முட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அழுகிய முட்டைகளுக்கு பதிலாக, புதிய நல்ல நிலையில் உள்ள முட்டைகளும் சம்பந்தப்பட்ட முட்டை வினியோகஸ்தர்களிமிருந்து பெறப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்ற பொய்யான செய்தியை ஆராயாமல் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அறிக்கைவிட அண்ணாமலைக்கு எப்படி மனம் வருகிறதோ தெரியவில்லை. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. எந்த நிலையிலும், அழுகிய முட்டைகள் ஒரு குழந்தைக்கு கூட வழங்கப்படவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக ஆதாரத்துடன் தெரிவிக்கிறேன்'' என்று கூறப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios