அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் டிசம்பர் 4-ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில் இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை வெள்ளிக்கிழமை உருவானது. இது, தற்போது அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் நிலை கொண்டுள்ளது. இத்தாழ்வு நிலை, மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. 

இது தமிழக கடலோரத்தை நெருங்கும்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் அநேக இடங்களில் வரும் 4 மற்றும் 5-ம் தேதிகளில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், அம்பாசமுத்திரத்தில் தலா 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர், திருநெல்வேலி மாவட்டம் ஆய்க்குடி, தென்காசி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.