கேரளாவில் பரவும் புதுவகை தக்காளி காய்ச்சல் குறித்து தமிழக மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்றும் தக்காளிக்கும் தக்காளி வைரஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

தக்காளி வைரஸ்:

கேரளாவில் புதிய வகை தக்காளில் வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. அதில், குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லம் மாவட்டத்தில் இதுவரை 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சலால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பலருக்கு திடீரென காய்ச்சல் ஏற்படுவதுடன், உடல்வலி, சோர்வு, கைகால்கள் வெள்ளை நிறமாக மாறுதல், முகம் மற்றும் உள்ளங்கைகளில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்றுதல், வலியை தரும் பாதிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குழந்தைகள் பாதிப்பு:

புதிய வகை தக்காளில் காயச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரே வகை அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில், தக்காளி காய்ச்சல் எனப்படும் புதிய வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த வகை காய்ச்சலால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் ஏதும் இல்லை எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் பாதிப்பு..?

கொல்லம் தொடர்ந்து ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் போன்ற பகுதிகளில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக சுகாதாரத்துறை செயலாளர், தக்காளிக்கும், தக்காளி வைரசுக்கும் எந்த தொடர்பும்இல்லை என்றும் இது ஒருவகையான காய்ச்சல்தான் என்றும் கூறியுள்ளார்.இதனால் பெரிய பாதிப்பு இல்லை எனவும் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முகத்தில் தக்காளி போல புள்ளிகள் வருவதால் தக்காளி வைரஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். கொல்லத்தில் பரவும் வைரஸ் தொடர்பாக தமிழக மக்கள் அச்சம் அடைய தேவையில்லை. அந்த வைரசை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க: குழந்தைகளை தாக்கும் “தக்காளி காய்ச்சல்” 85 குழந்தைகள் பாதிப்பு.. கேரளாவில் பீதியை கிளப்பும் வைரஸ்!