காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்துடன் வாழ்த்து சொன்ன ஆளுநர்.. என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க..
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்துடன் ஆளுநர் மாளிகை வாழ்த்து தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டு தை 2-ம் நாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று தமிழ்நாடு முழுவதும் மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் மாளிகை திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளது.
அந்த செய்தியில் காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் இடம்பெற்றுள்ளது. மேலும் “இந்த திருவள்ளுவர் தினத்தில், நமது தமிழ்நாட்டின் ஆன்மிக பூமியில் பிறந்த, மதிப்பிற்குரிய கவிஞரும், சிறந்த தத்துவஞானியும், பாரதிய சனாதன பாரம்பரியத்தின் துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரின் ஞானம் நமது தேசத்தின் கருத்துக்களையும் அடையாளத்தையும் வடிவமைத்து, வளப்படுத்தி, ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் வழிகாட்டியாகவும், உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளது. இந்த புனித நாளில், அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் களைகட்டிய மாட்டுப் பொங்கல்.. கால்நடைகளுக்கு நன்றி செலுத்தி உற்சாகம்..
வெள்ளை உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தையே தமிழக அரசு 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தி வருகிறது. ஆனால் பாஜக தலைவர்கள் சிலர் அவ்வபோது காவி உடையணிந்த திருவள்ளுவர் பயன்படுத்துவதும், அவரை சனாதனவாதி என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். இந்த சூழலில் தற்போது ஆளுநர் மீண்டும் காவி உடையணிந்த திருவள்ளுவர் படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.