நாமக்கல்

மின்தடை ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது என்று முசிறி சிட்கோ தொழிற்பேட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையத்தில் சோதனை மின்னோட்டத்தை தொடங்கி வைத்தபோது அமைச்சர் தங்கமணி பேசினார்.

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், முசிறி சிட்கோ தொழிற்பேட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தில் சோதனை மின்னோட்ட தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 

இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி தலைமைத்  தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் துணை மின் நிலையத்தில் சோதனை மின்னோட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.

பின்னர் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம், "முதலமைச்சர் கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் பேசுகையில் 132 துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். 

அந்த வகையில் கடந்த ஒருவார காலத்தில் மட்டும் கிட்டத்தட்ட 10 துணை மின்நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள துணை மின்நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டுள்ளன. 

அனைத்து பகுதிகளிலும் சீராக மின்சாரம் வழங்கும் வகையில் துணை மின்நிலையங்கள் புதிதாக அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் முசிறி சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் புதிய தொழிற்சாலைகள் அமைய உள்ள காரணத்தினால் இந்த பகுதியில் ஒரு துணை மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 

விவசாய பெருமக்களும் பயன்பெறுகின்ற வகையில் இந்த துணை மின்நிலையம் விளங்கும். மின்சார வாரியத்தை பொறுத்த வரையில் 132 துணை மின்நிலையங்கள் என்று சொன்னாலும் இன்னும் தேவைப்படுகின்ற பகுதிகளிலும், இடம் கிடைக்கின்றபோது மக்களின் தேவைக்காக மின்அழுத்தம் சீராக கிடைக்கின்ற வகையிலும் புதிய துணை மின்நிலையங்கள் அமைப்பதற்கு மத்திய அரசு போதிய நிதியை கொடுக்க இருக்கிறது.

இப்போது இதுவரையில் இல்லாத அளவிற்கு உச்சபட்ச அளவாக 15420 மெகாவாட் அளவிற்கு மின்உற்பத்தி நடைபெற்று, மக்களின் தேவையை பூர்த்தி செய்து இருக்கிறோம். 

வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள காரணத்தினால் 16000 மெகாவாட் அளவிற்கு மின்தேவை இருக்கும் என்று நினைக்கிறோம். மின்தடை ஏற்படாத வகையில், அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு உதவி ஆட்சியர் பாஸ்கரன், மின்வாரிய தலைமை பொறியாளர் சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் சந்தானம், மேற்பார்வை பொறியாளர் பால்ராஜ் உள்பட அரசு அலுவலர்கள், லாரி பாடி பில்டிங் சங்கத்தினர், தொழிலதிபர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள் ஆகியோர் பங்கேற்ரனர்.