Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாட்டிற்கு ரூ.5060 கோடி இடைக்கால நிவாரணம்: முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக கேள்வி!

மத்திய அரசிடம் தமிழ்நாட்டிற்கு இடைக்கால நிவாரணம் கோரிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது

Tamilnadu bjp questions to cm mk stalin on interim relief fund smp
Author
First Published Dec 6, 2023, 12:33 PM IST

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் சென்னையில் படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழை உட்கட்டமைப்பை பெரிதும் சேதப்படுத்தியுள்ளது. எனவே, தமிழ்நாட்டிற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடியை உடனடியாக வழங்குமாறு பிரதமர் மோடியை முதல்வர்  ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், மத்திய அரசிடம் தமிழ்நாட்டிற்கு இடைக்கால நிவாரணம் கோரிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும், சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன என்றும், இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாட்டிற்கு இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ரூ.5060 கோடியினை உடனடியாக வழங்கிடுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒரு முதலமைச்சராக கோரிக்கை வைப்பது அவரின் கடமை மற்றும் பொறுப்பு. அதே நேரம் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட மத்திய அரசின் குழு உறுதியாக வரும். ஆனால், சில கேள்விகளுக்கு முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும்.

 

 

1. கடந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைத்த பிறகு சாலைகளை அமைக்காததற்கு என்ன காரணம்? மழைநீர் வடிகால்வாய்க்காக சாலைகளை தோண்டி பின்னர் அவற்றை அமைத்த பின்னர் சாலைகளை நல்ல நிலைமைக்கு கொண்டு வராதது ஏன் ? சாலைகள் பாதிப்படைந்திருப்பதாக முதல்வர் சொல்வது முறையா? மோசமான நிலைமையில் இருந்த சாலைகள் அதிக மழை நீரால் படு மோசமாக போனதற்கு அரசு தானே காரணம்?

2. ஆறுகள், கால்வாய்கள் தூர் வாரப்பட்டதா? ஆம் என்றால் அது குறித்த புள்ளி விவரங்களை அரசு வெளியிடுமா?

3. மழை நீர் பாதிப்பு குறித்து திட்டமிடுவதற்காக ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்ட நிலையில், இந்த நிதியாண்டில் ஒரு முறை கூட அந்த குழு கூடவில்லை என்று சொல்லப்படுகிறதே? அப்படி கூடியிருந்தால் அதன் பரிந்துரைகள் என்ன? கூடவில்லையென்றால், அதற்கான காரணம் என்ன? என்பதை அரசு விளக்குமா?

4.சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்களுக்கான பராமரிப்புக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு செலவிட்ட தொகையென்ன? அப்படி முறையாக செலவிட்டிருந்தால், பாதிப்பு எப்படி ஏற்பட்டிருக்கும்? செலவிடவில்லையெனில், அதற்கான காரணம் என்ன?

5. தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் மின் இணைப்பு கொடுக்கப்படாது இருக்கும் நிலையில், தண்ணீர் தேங்காத பல இடங்களில் இப்போது வரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதற்கு காரணம் என்ன?  மின் உபகரணங்களின் தட்டுப்பாடு தான் என்று சொல்லப்படுவது உண்மையா?

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வன்கொடுமை: என்சிஆர்பி அறிக்கையில் தகவல்!

6. தாழ்வான இடங்களில் உள்ள மக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கையை கொடுக்க தவறியது ஏன்? அவர்களின் வாகனங்கள் அடித்து செல்லும் அளவிற்கு பாதிப்பு ஏற்படும் என்ற கணிப்பை செய்ய தவறியது ஏன்?

7. பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் சாலைகள் பள்ளமானதும், உயிர்சேதம் மற்றும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று தகவல் கவலையளிக்கிறது. அப்படியானால், உரிய பாதுகாப்பு விதி முறைகளை கையாளாமல் கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன என்பதை உறுதி செய்கிறது அல்லவா?

8.மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கும் நிலையில், தொடர்ந்து இணைப்பு வேலைகள் நடைபெறாதது ஏன்?

9. பாதிக்கப்பட்ட மக்கள் இருக்குமிடங்களுக்கு உதவிகள் செல்ல தாமதமாவதற்கு காரணம் மோசமான சாலைகள் தான் என்பதை ஏற்றுக்கொள்கிறதா அரசு?

10. இனி வருங்காலத்திலாவது நீர்நிலைகள் மீது கட்டிடம் கட்ட அனுமதி அளிக்கப்படாது என்ற உறுதி மொழியை அரசு கொடுக்குமா? அனுமதியில்லாது கட்டப்பட்ட கட்டடங்களை அகற்ற உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அளிக்குமா தமிழக அரசு?

மத்திய அரசு உதவி புரியும். நிதி அளிக்கும். ஆனால், மாநில அரசின் சரியான திட்டமிடுதலும், செயல்பாடும் இல்லையெனில் அந்த நிதியும், உதவியும் விழலுக்கிறைத்த நீரே! கேள்விகள் தொடரும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios