தமிழக அமைச்சர்கள் சொத்து குவிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் பாஜக கேவியட் மனு!
தமிழக அமைச்சர்கள் 3 பேரின் சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் தமிழக பாஜக சார்பாக கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாடு அமைச்சர்கள் பொன்முடி, கேகேஎஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கில் தங்களது கருத்தையும் அனுமதிக்க கோரி தமிழ்நாடு பாஜக திடீரென உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
“அதிகார பலத்தில் தமிழக அரசின் விசாரணை அமைப்புகளை முடக்கி, ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து எளிதில் தப்பித்துவிடலாம் என்ற திமுகவின் எண்ணம் நிறைவேறாது. திமுகவின் ஒவ்வொரு ஊழல் அமைச்சருக்கும் எதிராக சட்டப் போராட்டம் நடத்தி, அவர்களுக்கு சட்டரீதியான தண்டனை கிடைப்பதை பாஜக நிச்சயம் உறுதி செய்யும்.” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “திமுக அமைச்சர்கள் பொன்முடி, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான ஊழல் வழக்கு விசாரணையில் தமிழக பாஜக சார்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மூன்று அமைச்சர்களின் சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவித்ததை எதிர்த்து தமிழக அரசின் ஊழல் தடுப்பு பிரிவினர் மேல்முறையீடு செய்யவில்லை. திமுக அமைச்சர்களுக்கு எதிரான இந்த சொத்துக் குவிப்பு வழக்குகள் கையாளப்பட்ட விதம் சந்தேகத்துக்கிடமாக இருப்பதால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்குகள் தொடர்பான சீராய்வு மனு விசாரணையை தாமாக முன்வந்து எடுத்தார். இந்த வழக்குகள் கையாளப்பட்ட விதமும் தமிழக அரசின் விசாரணை அமைப்புகளின் போக்கும் அதிர்ச்சியளிப்பதாக நீதிபதி கவலை தெரிவித்திருந்தார்.
2ஜி மேல்முறையீட்டு வழக்கு: நாளை தீர்ப்பு தேதி?
அமைச்சர் பொன்முடி தனக்கு எதிராக உயர்நீதிமன்றம் தாமாக முன்வைத்து எடுத்த இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரியும் இடைக்கால தடை விதிக்க கோரியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இதேபோல அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரும் உச்சநீதிமன்றத்தை நாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு, இந்த வழக்குகளில் தமிழக பாஜக கருத்துகளை உச்சநீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என கோரி பாஜக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளோம். ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி அவர்களுக்கு சட்ட ரீதியான தண்டனை கிடைப்பதை பாஜக நிச்சயம் உறுதி செய்யும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.