Tamilisai soundararajan Explanation on Cow Selling Judgment
இறைச்சி மாடு விற்க தடையில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும், மத்தி யஅரசின் சட்டத்துக்கும் தொடர்பில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
மாட்டிறைச்சி விற்பனை செய்வதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு பல்வேறு அமைப்பினர், கட்சியினர், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைதொடர்ந்து விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், மத்திய அரசின் திட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து இறைச்சிக்காக மாடுகள் விற்க கட்டுப்பாடு விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும் இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தன. இன்று நடைபெற்ற விசாரணையில் மத்திய அரசு சார்பில் விளக்கம் அளித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், இறைச்சி மாடுகளை விற்பதற்கான தடையை தளர்த்துவது குறித்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், மக்களின் கருத்துகள் கேட்டு, விரைவில் புதிய உத்தரவு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து இறைச்சிக்காக மாடுகள் விற்க மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடையை நீக்க மறுத்து இந்த வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.
இந்த நிலையில், கோவில்பட்டி, அருகே கட்டாலங்குளத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இறைச்சிக்காக மாடு விற்க தடையில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும், மத்திய அரசின் சட்டத்திற்கும் தொடர்பில்லை என்று கூறினார்.
