பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, தமிழகத்தில் அழிந்து வரும் ஏரி, குளங்களைப் பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் படிப்படியாக அழிந்து வருவதைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய அவர், தமிழகத்தின் நீர் வளத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். நெய்வேலி நிலத்தடி நீர், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், கூவம் ஆறு உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

குறிப்பாக ஆறுகளில் தொழிற்சாலை மற்றும் வீட்டு கழிவுகள் கலப்பதை முதலில் தடுக்க வேண்டும் என்றும், அதன் பிறகே தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். சென்னை மட்டுமின்றி தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் நீர்நிலைகள் மாசுபடுவதாக சௌமியா அன்புமணி தெரிவித்தார். சனத்குமார் நதியில் கழிவுநீர் கலப்பதால் தென்பெண்ணை ஆறும் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

தாமிரபரணி ஆற்றை முதலில் தூய்மைப்படுத்திவிட்டு, அதன் கரையோர மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மேலும், ஏரிகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும், ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள நீர்நிலைகளை புவியியல் தகவல் தொழில்நுட்ப முறையில் வரைபடமிட்டு வகைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

காவிரி-குண்டாறு இணைப்பு, அத்திக்கடவு-அவினாசி திட்டம் இரண்டாம் கட்டம், மேட்டூர் உபரி நீர் திட்டம், தாமிரபரணி-நம்பியாறு உள்ளிட்ட ஆறுகள் இணைப்பு, நொய்யல் ஆற்றைத் தூய்மைப்படுத்தும் திட்டம், தென்பெண்ணை-பாலாறு இணைப்பு ஆகியவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

பாலாற்றில் கூடுதல் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்றும், நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்தினால் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பல ஏரிகளுக்கு நீர் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். ராஜேந்திர சோழன் காலத்தில் உருவாக்கப்பட்ட சோழகங்கம் ஏரி உள்ளிட்ட பழமையான நீர்ப்பாசன அமைப்புகளையும் மீட்டெடுக்க வேண்டும் எனக் கூறினார்.

தர்மபுரி தொகுதியின் நீர்ப்பாசனத் தேவைகளையும் அவர் சட்டப்பேரவையில் எடுத்துரைத்தார். காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தினால் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகளுக்கு நீர் கிடைக்கும் என்றும், வறட்சி குறையும் என்றும் தெரிவித்தார். ஏரியூர் பகுதியில் குடிநீரில் உள்ள புளோரைடு பிரச்சினைக்கு தீர்வு காண கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

தர்மபுரி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள ஏரி, குளங்களை சிறப்பு கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழகத்தின் நீர்ப்பாசன மற்றும் நீர்நிலை பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்த சுமார் ரூ.1 லட்சம் கோடி செலவாகும் எனக் குறிப்பிட்ட சௌமியா அன்புமணி, அதற்காக அரசு கடன் பெற்றாலும் பரவாயில்லை என்று தெரிவித்தார்.

போதுமான நீர் கிடைத்தால் குடிநீர் பிரச்சினை குறையும், விவசாயம் பெருகும், மக்களின் சுகாதாரம் மேம்படும், தமிழகத்தின் பொருளாதாரமும் வளர்ச்சி பெறும் என்பதால் நீர்வளத்தில் செய்யப்படும் முதலீடு எதிர்காலத்தில் பலன் தரும் என்றும் அவர் கூறினார். இதனிடையே, நீர்நிலைகளை கண்டறிந்து வகைப்படுத்தும் நடவடிக்கைகள் வருவாய்த்துறையுடன் இணைந்து ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் பதிலளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.