Asianet News TamilAsianet News Tamil

வரும் நாட்களில் கொரோனா எண்ணிக்கை உச்சம் தொடும்.. ஆனால்..! அமைச்சர் பரபரப்பு பேட்டி..

பொங்கல் பண்டிகை காரணமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வரும் நாள்களில் அதிகரிக்கும் என்றும், அதனைக் கண்டு பொதுமக்கள் அச்சமடையத் தேவை இல்லை என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 

Tamil Nadu Health Minister Ma.Subramanian Press Meet
Author
Tamil Nadu, First Published Jan 19, 2022, 4:05 PM IST

பொங்கல் பண்டிகை காரணமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வரும் நாள்களில் அதிகரிக்கும் என்றும், அதனைக் கண்டு பொதுமக்கள் அச்சமடையத் தேவை இல்லை என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கை மாற்றுஅறுவை சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த பொங்கல் விழா காரணமாக தொடர்ச்சியாக ஐந்தாறு நாட்கள் விடுமுறை. இந்த விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து மட்டுமே 8 லட்சம் பேர் தமிழகத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குச் சென்றுள்ளனர். இதனால் கிராமங்களிலும் தொற்றுப் பரவல் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறியிருந்தோம். அது கடந்த இரண்டு நாட்களில் நிரூபணமாகியுள்ளது. அடுத்துவரும் இரண்டு, மூன்று நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், மக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஏறக்குறைய 1 லட்சத்து 92 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது, இதில் 9 ஆயிரம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது, 1 லட்சத்து 83 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன.

கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், 104 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மத்திய அமைச்சர் அமித் ஷாவை அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் சந்தித்த பின்னர், நீட் தேர்வு விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 23,888 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய தினம் 23,443 பேருக்கு கொரோனா உறுதியாகியிருந்த நிலையில், அது சற்று அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவிலிருந்து சுமார் 15,036 பேர் மீண்டுள்ளனர். அதேநேரம், 29 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 13 பேர் தனியார் மருத்துவமனையிலும், 16 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இன்று பாதிப்பு கணிசமாக உயர்ந்ததை தொடர்ந்து, சுமார் 1,61,171 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதுவரை தமிழகத்தில் தொற்று உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கையானது 29,87,254 என உயர்ந்துள்ளது. அதேபோல பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27,89,045 என்றும், உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 37,038 என்றும் ஆகியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios