மருத்துவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர எஸ்மா சட்டத்தை பயன்படுத்தலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. 

முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு கோரி மருத்துவ மாணவர்கள் கடந்த 15 தினங்களுக்கும் மேலாக பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இடஒதுக்கீடை திரும்பப் பெற சிறப்புச் சட்டமே தீர்வு என்றும் மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

இதற்கிடையே மாணவர்களின் போராட்டத்தை ஏன் முடிவுக்கு கொண்டு வர அரசு முயற்சிக்க வில்லை என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதிகள், அரசியல்வாதிகள், நீதிபதிகள் என யாரும் அரசு மருத்துவமனைக்கு வருவதில்லை என்று தெரிவித்தனர். மருத்துவர்கள் தொழிலாளர் அல்ல என்றும், அவர்கள் கடவுள் போல் மக்களால் பார்க்கப்படுவதாகவும் கூறினார். 

மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் பயிலும் மாணவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று பரிந்துரை செய்த நீதிபதிகள், பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் எஸ்மா சட்டத்தை பயன்படுத்தி அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறினர். 

எஸ்மா என்றால் என்ன?

அத்தியாவசிய சேவை பராமரிப்புச் சட்டம் என்பதன் சுருக்கமே எஸ்மா ஆகும். எஸ்மா சட்டம் அரசால் பிறப்பிக்கப்பட்டால் அரசு ஊழியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் சட்டவிரோதமாக கருதப்படும். இச்சட்டத்தின் கீழ் ஒருவருக்கு 6 மாத காலம் வரை சிறைத்தண்டனை வழங்க முடியும்.