தமிழ்நாடு தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 50 பேருக்கு தமிழக அரசு பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளது. தொழில் வணிகத் துறையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் தட்டச்சர் பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்.
TNPSC appointment orders : தமிழகத்தில் தமிழ்நாடு தேர்வு வாரியம் சார்பாக அரசு பணிக்கு பணியாளர்கள் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்த வகையில் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது தமிழக அரசு பணி நியமன ஆணையை வழங்கியுள்ளது. தொழில் வணிகத்துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தெரிவு செய்யப்பட்ட 50 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (23.6.2025) தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் தொழில் வணிகத் துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 50 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
அரசுப் பணியாளர் தேர்வாணையம் - 50 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வேலை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. இவை அளவான முதலீட்டில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கி ஒட்டுமொத்த சமூக-பொருளாதார மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும். வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பு செய்து வருகின்றன. தொழில் வணிகத் துறையானது சுய வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு திட்டங்கள், நிறுவனங்களை அமைக்க மற்றும் விரிவாக்கம் செய்வதற்கான மானியங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை தொழில்முனைவோரின் மூலம் தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் வழங்கி பங்காற்றி வருகிறது. தொழில் வணிகத் துறை வாயிலாக கலைஞர் கைவினைத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் போன்ற பல்வேறு சுயவேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தொழில் வணிகத் துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெற அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்ட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக 19 இளநிலை உதவியாளர். 22 தட்டச்சர் மற்றும் 9 சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மொத்தம் 50 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் இன்றையதினம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டன.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை -177 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள்
இந்த அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள்வரை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 1 உதவி கண்காணிப்பாளர். 11 உதவி இயக்குநர்கள் 18 உதவி பொறியாளர்கள் 47 உதவியாளர்கள் 34 இளநிலை உதவியாளர்கள், 41 தட்டச்சர்கள் மற்றும் 25 சுருக்கெழுத்து தட்டச்சர்கள் ஆகிய பணியிடங்களுக்கு மொத்தம் 177 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
