திருநெல்வேலி

நீட் விவகாரத்தில் தமிழக அரசு கடுமையாக போராடியது. ஆனால் மத்திய அரசு, தமிழக அரசை வஞ்சித்து விட்டது என்று திருவேங்கடத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ ஆளும் கட்சிக்கு சப்போர்ட்டாக பேசினார்.

மாணவி அனிதா சாவுக்கு மோடி அரசு தான் காரணம் என திருவேங்கடத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ குற்றம்சாட்டினார்.

திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் ஒன்றியத்தில் உள்ள முக்கூட்டுமலை, நக்கலமுத்தன்பட்டி, வடக்குப்பட்டி, ஜமீன் தேவர்குளம், இளையரசனேந்தல், பிள்ளையார்நத்தம் உள்ளிட்ட 12 பஞ்சாயத்துகளானது, சட்டமன்ற தொகுதி மறுசீரமைப்பின்போது சங்கரன்கோவில் தாலுகாவில் இருந்து பிரித்து கடந்த 2008–ஆம் ஆண்டு கோவில்பட்டி தாலுகாவுடன் சேர்க்கப்பட்டது.

இதனால் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக, மதுரை உயர்நீதிமன்றத்தில் இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த பொன்ராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வருகிற 5–ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் அந்த 12 பஞ்சாயத்துகளையும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருவேங்கடம் தாலுகாவில் நிரந்தரமாக இணைக்க வலியுறுத்தி திருவேங்கடம் காந்தி மண்டபம் அருகில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதில் மாவட்டச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன், ம.தி.மு.க. ஆட்சிமன்ற குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மருத்துவர் சதன் திருமலைக்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.

அப்போது வைகோ, “தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் மக்களின் நலன் கருதி 12 பஞ்சாயத்துகளும் திருவேங்கடம் தாலுகாவில் நீடிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை விளக்கி கூறினேன். அப்போது அவர் ஆவண செய்வதாக கனிவாக கூறினார்.

இதுதொடர்பாக தொலைபேசி வாயிலாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடமும் பேசினேன். அவர்களும், நீங்கள் கூறுவது நியாயமானது தான் என்று தெரிவித்தனர்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோரிடமும் பேசினேன். இதற்கு உதவுவதாக கூறினார்கள்.

கடந்த மாதம் 31–ஆம் தேதி உள்ளாட்சி நிர்வாக துறை ஆணையரிடம் கூறியபோது, எனது கருத்தை மறுத்து வருவாய் துறையிலும், காவல் துறையிலும் மாற்றம் செய்து விட்டோம். அது கோவில்பட்டி தாலுகாவில் சேர்க்கப்பட்டுவிட்டது. இனி எவ்வாறு மாற்ற முடியும் என்று கூறிவிட்டார்.

அவரிடம் அமைச்சர்கள் தவறான யோசனைகளை கூறி மக்களின் நலனை காற்றில் பறக்க விடுகிறார்கள். நான் உங்களிடம் கெஞ்ச மாட்டேன். மக்களை திரட்டி போராடுவேன் என்று கூறினேன். அதனடிப்படையில் தமிழக அரசை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

வருகிற 5–ஆம் தேதி தமிழக அரசு இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதிலும் உடன்பாடு ஏற்படாவிட்டால் ஊர் ஊராக சென்று மக்களை திரட்டி மிகப் பெரிய அளவிலான போராட்டத்தை நடத்த உள்ளேன்.

தஞ்சாவூரில் நடைபெற உள்ள மாநாட்டுக்கு குருவிகுளம் ஒன்றியத்தில் இருந்து கட்சி தொண்டர்கள் அனைவரும் குடும்பத்துடன் வர வேண்டும். அந்த மாநாட்டில் சரியான முடிவு அறிவிக்கப்படும். அதன்படி எனது அரசியல் நடவடிக்கை இருக்கும்.

மாணவி அனிதாவின் சாவுக்கு மோடி அரசு தான் காரணம். இந்த பிரச்சனையில் தமிழக அரசு கடுமையாக போராடியது. ஆனால் மத்திய அரசு இந்த பிரச்சனையில் தமிழக அரசை வஞ்சித்து விட்டது” என்று அவர் பேசினார்.