தமிழகத்தில் வழக்கத்தை விட 77 சதவீதம் மழை பெய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.நேற்று தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மழை பெய்தது. வடகிழக்குப் பருவமழையில் கடந்த 24 மணி நேரத்தில் மழைப்பொழிவினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘கடந்த 24 மணி நேரத்தில், 30 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 3.6 மி.மீ. ஆகும். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் (274.6 மி.மீ.) அதி கனமழையும், தென்காசி மாவட்டம், ஆயிகுடி (101.0 மி.மீ.) மற்றும் தேனி மாவட்டம், பெரியாறு (81.0 மி.மீ.) ஆகிய இரண்டு இடங்களில் கனமழையும் பெய்துள்ளது என்று கூறி இருக்கிறது.

வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 10ஆம் தேதி இன்று வரை 683.4 மி.மீ. பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 385.9 மி.மீட்டரை விட 77 சதவீதம் கூடுதலானது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 14,138 ஏரிகளில், 8,690 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது.
2,989 ஏரிகள் 75 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 90 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 224.297 டிஎம்சி,-ல், நேற்றைய நிலவரப்படி, 212.009 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இது 94.52 சதவீதம்.கடந்த 24 மணி நேரத்தில் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் 2 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

47 கால்நடைகள் இறந்துள்ளன. 633 குடிசைகள் பகுதியாகவும், 55 குடிசைகள் முழுமையாகவும், ஆக மொத்தம் 688 குடிசைகளும், 100 வீடுகள் பகுதியாகவும், 15 வீடு முழுமையாகவும் ஆக மொத்தம் 115 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 811 ஹெக்டர் வேளாண்மை பயிர்களும் 16 ஆயிரத்து 447 ஹெக்டர் தோட்டக்கலை பயிர்களும் 33 சதவீதத்திற்கு மேல் பாதிப்படைந்து இருக்கிறது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
