வெள்ள நிவராணம் 12,500 ரூபாய்... எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை வெள்ள பாதிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எண்ணூர் மற்றும் மணலி பகுதிகளை சேர்ந்த மக்களின் வீடுகளுக்குள் வெள்ள நீரோடு சேர்ந்து எண்ணெய் கசிவும் வந்ததால் அனைத்து பொருட்களும் நாசமாகியது. இதனையடுத்து 6 ஆயிரம் ரூபாய் வெள்ள நிவாரணத்தோடு 12500 ரூபாய் கூடுதலாக நிவாரணம் வழங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையை புரட்டி போட்ட மழை வெள்ளம்
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதன் காரணமாக மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இதனையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் மணலி மற்றும் எண்ணூர் பகுதியில் மழை வெள்ளத்தோடு சேர்ந்து சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து எண்ணெய் கழிவும் வெளியேறியதால் வீடுகளில் இருந்த அணைத்து பொருட்களும் சேதமடைந்தது. மேலும் வாகனங்கள், கால்நடைகள், தோட்டம் உள்ளிட்ட அனைத்துமே வீணாகியது. மேலும் எண்ணெய் கசிவானது கொதஸ்தலை ஆறு வழியாக கடல் வரை 20 சதுர கிலோ மீட்டருக்கு பரவி இருப்பது தெரியவந்தது.
வீடுகளுக்குள் புகுந்த எண்ணெய் கசிவு
இதனை அகற்றும் பணியில் சிபிசில் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது. எண்ணெய் பாதிப்பால் தங்களது உடைமைகள் உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, திருவொற்றியூர் மண்டல புயல் மழை கண்காணிப்பு அதிகாரி கந்தசாமி ஐஏஎஸ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது நிவாரணத்தொகு கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். மேலும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தனர்.
நிவாரணத் தொகை அறிவிப்பு
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு அதிகாரி கந்தசாமி. "மழை மற்றும் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6,000 ரூபாய் நிவாரணத் தொகை தமிழ்நாடு அரசு சார்பாக இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.இதனிடையே எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட எண்ணூர், மணலி பகுதி மீனவர்களுக்கு கூடுதலாக 12500 ரூபாய் வழங்க இருப்பதாக கூறினார். மேலும் படகுகளுக்கு 10ஆயிரம் ரூபாயும் வழங்க அரசு முடிவெடுத்திருப்பதாக தெரிவித்தார். இதற்கான கணக்கெடுப்பு பணி முடிவடைந்துள்ளதாகவும், விரைவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்