தமிழ்நாட்டில் வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல், பாட்டிலில் அடைக்கப்பட்ட இளநீர், நீரா என்ற புளிக்காத கள் ஆகியவற்றை சென்னையில் விற்பனை செய்ய போகிறோம் என்று தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி அறிவித்துள்ளார்.
தமிழத்தில் நடந்த சல்லிக்கட்டுப் புரட்சியின் போது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வெளிநாட்டு குளிர்பானங்களான கோக், பெப்ஸி போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநாட்டு குளிர்பானங்களை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்று ஒற்றைக் குரலாய் முழக்கம் எழுப்பினர்.
மாணவர்கள் புரட்சியின் எதிரொலி காரணமாக தற்போது தமிழகத்தில் வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனை பெரும் சரிவைக் கண்டுள்ளது.
அதே நேரத்தில், உள்நாட்டு இயற்கை பானங்களான இளநீர், மோர், கள், பதநீர் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்து உள்ளது.
மேலும் தற்போது இளநீர், பதநீர் போன்ற பானங்கள் புதுப்பொலிவு பெற்று வாடிக்கையாளர்களுக்கு வசதியாக பாட்டில்களில் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் இளநீர், நீரா எனும் புளிக்காத கள் போன்றவையும் பாட்டில்களில் விற்பனைக்க வர இருப்பதாக தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது:
“தமிழகத்தில் மட்டுமே கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கள் என்பது போதை பொருள் இல்லை. பன்னாட்டு பானங்களுக்கு பதிலாக நமது தமிழ்நாட்டு பானங்கள் உலகம் முழுவதிலும் சந்தைப்படுத்தப்பட வேண்டும்” என்றுத் தெரிவித்துள்ளார்.
