ஆசிய போட்டிகளில் சிறப்பாக விளையாடி தங்கம் உள்பட பதங்கங்களை குவித்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஊக்கத்தொகையை வாரி வழங்கினார்.
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025ல் (Asian Youth Games 2025) தமிழகத்தை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை வேட்டையாடி வருகின்றனர். இந்த போட்டியில் இந்திய ஆண்கள் கபடி அணியும், இந்திய பெண்கள் கபடி அணியும் தங்கம் வென்று சாதனை படைத்தன. இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றிருந்த இளம் வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா, ஆண்கள் அணியில் இடம்பெற்றிருந்த அபினேஷ் மோகன்தாஸ் சிறப்பாக விளையாடி இருந்தனர்.
தமிழக வீரர்கள் சாதனை
இவர்கள் இருவரையும் நேரில் அழைத்து பாராட்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கியிருந்தார். மேலும் கோவில்பட்டியை சேர்ந்த பளுதூக்குதல் வீரர் மகாராஜன் ஆறுமுகபாண்டியன் 60 கிலோ ஆண்கள் பிரிவில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தார். திருநெல்வேலியைச் சேர்ந்த தடகள வீரர் எட்வினா ஜேசன் ரிலே போட்டியில் இரண்டு வெள்ளியை தட்டித் தூக்கியிருந்தார்.
தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் சாதனை
இது மட்டுமின்றி 4-ஆவது தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் மனவ், நந்தினி, ஒலிம்பா ஸ்டெஃபி, சரண், தினேஷ், ஆதர்ஷ், பவானி ஆகிய தமிழக வீரர், வீராங்கனைகள் 4 தங்கம் உள்பட 10 பதக்கங்களை வென்றுள்ளனர். இவர்கள் அனைவரையும் நேரில் அழைத்து பாராட்டிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு சாம்பியன்ஸ் ஃபவுண்டேசன் சார்பில் மொத்தம் ரூ.15 லட்சத்தை ஊக்கத்தொகையாக வழங்கினார். இதேபோல் இரண்டு வெள்ளி வென்ற எட்வினா ஜேசனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை உதயநிதி வழங்கி பாராட்டினார்.
ரூ.15 லட்சம் ஊக்கத்தொகை
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்ட உதயநிதி, ''4-ஆவது தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் 4 தங்கம் உட்பட மொத்தம் 10 பதக்கங்களைக் குவித்துள்ள நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் - வீராங்கனையர் மனவ், நந்தினி, ஒலிம்பா ஸ்டெஃபி, சரண், தினேஷ், ஆதர்ஷ், பவானி ஆகியோருக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் ஃபவுண்டேசன் சார்பில் மொத்தம் ரூ.15 லட்சத்தை ஊக்கத்தொகையாக வழங்கி பாராட்டி மகிழ்ந்தோம். சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டு திறமையாளர்களின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர நாம் எல்லா வகையிலும் துணை நிற்போம் - விளையாட்டுத் துறையில் சரித்திரம் படைப்போம்'' என்று கூறியுள்ளார்.

எட்வினா ஜேசனுக்கு ரூ.25 லட்சம்
உதயநிதி வெளியிட்ட மற்றொரு பதிவில், ''பஹ்ரைனில் நடைபெற்ற 3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை தங்கை எட்வினா ஜேசனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை இன்று வழங்கினோம். சர்வதேச அரங்கில் தமிழ்நாட்டுக்கு பெருமைச் சேர்த்துள்ள தங்கை எட்வினாவை வாழ்த்தினோம். அவரது இந்த சாதனை தொடரட்டும் என பாராட்டி மகிழ்ந்தோம்'' என்று தெரிவித்துள்ளார்.
